Asianet News TamilAsianet News Tamil

நீதி பெற்றுத் தராமல் பாமக ஓயாது.. கலங்க வேண்டாம்.. கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் நடந்தது என்ன?

உயிரிழந்த கோவிந்தராசுவின் வாயில் நஞ்சை ஊற்றி அவர் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பொய் செய்தி பரப்பப்படுகிறது. கொல்லப்பட்ட கோவிந்தராசு பாமக நிர்வாகி. அவரது படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை பா.ம.க. ஓயாது. 

PMK executive murdered...Cuddalore MP What happened at the cashew plant?
Author
Cuddalore, First Published Sep 21, 2021, 3:44 PM IST

கடலூர் திமுக  எம்.பி. முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த பாமக நிர்வாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் செயல்பட்டு வரும், கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி இரமேசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர் கொடூரமான முறையில்  அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமல் எதிரிகளை தப்பிக்க வைக்க செய்யப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை ஆகும்.

PMK executive murdered...Cuddalore MP What happened at the cashew plant?

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் உள்ள டி.ஆர்.வி. காயத்ரி முந்திரி ஆலையில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த ஆலை திமுகவைச் சேர்ந்த கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி இரமேசுக்கு சொந்தமானது ஆகும். தினமும் காலை 8 மணிக்கு பணிக்குச் சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்பும் கோவிந்தராசு நேற்றிரவு வீடு திரும்பவில்லை. அவரை அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணிக்கு, சென்னையில் பணியாற்றும் அவரது மகன் செந்தில் வேலை, கோவிந்தராசுவின் செல்பேசியிலிருந்து தொடர்பு கொண்ட கடலூர் மக்களவை உறுப்பினர் இரமேஷின் உதவியாளர் நடராஜன், ‘‘உனது தந்தை மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

PMK executive murdered...Cuddalore MP What happened at the cashew plant?

அதைத் தொடர்ந்து கோவிந்தராசுவின் குடும்பத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, அவரது உடல் முழுவதும் காயங்களும், இரத்தக் கரைகளும் உள்ளன. திடமான மன நிலை கொண்ட கோவிந்தராசு தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்புகளோ, தற்கொலை செய்து கொண்டவரின் உடலின் பல இடங்களில் காயங்கள் ஏற்படுவதற்கான  வாய்ப்புகளோ இல்லை. அந்தக் காயங்கள் மற்றும் இரத்தக்கரைகள் அனைத்தும் அவர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதால் ஏற்பட்டவை என்றே கூறப்படுகிறது. கோவிந்தராசு தற்கொலை செய்யும் நோக்குடன் நஞ்சு குடித்திருந்தால் அது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலை நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால், இரவு 8 மணிக்கு பணி முடித்து திரும்ப வேண்டிய கோவிந்தராசு மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அடுத்த நாள் அதிகாலையில் தான் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளனர். அப்படியானால் இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? இது குறித்து முந்திரி ஆலையில் பணியாற்றும் சிலரிடம் விசாரித்த போது மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி. இரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், ஆலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் சேர்ந்து கோவிந்தராசுவை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. உயிரிழந்த கோவிந்தராசுவின் வாயில் நஞ்சை ஊற்றி அவர் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பொய் செய்தி பரப்பப்படுகிறது. கொல்லப்பட்ட கோவிந்தராசு பாமக நிர்வாகி. அவரது படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை பா.ம.க. ஓயாது. 

PMK executive murdered...Cuddalore MP What happened at the cashew plant?

கோவிந்தராசு கொலை தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில், டி.வி.ஆர் ரமேஷ் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் காவல்துறை செயல்பாடுகள் நிறைவளிக்கவில்லை. கோவிந்தராசுவை இரக்கமற்ற முறையில் அடித்துக் கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில் கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி இரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக  அனைத்து எதிரிகளையும் கைது செய்ய வேண்டும். கோவிந்தராசுவின் உடலை வெளிமாவட்ட மருத்துவர்களைக் கொண்டு கூறாய்வு செய்ய வேண்டும்; கூறாய்வு முழுமையாக காணொலி பதிவு செய்யப்பட வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். கோவிந்தராசு குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், மிகக்கடுமையான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும் என ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios