வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். பொங்கலுக்கு முன்பாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நெருக்கடி கொடுத்தது. ஆனால், அதை அதிமுக பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தன்னை சந்திக்க  தைலாபுரம் வந்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியிடமும் இதை உறுதியாகவே டாக்டர் ராமதாஸ் தெரிவித்துவிட்டார்.

 
இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை நிறைவேறும் வரை கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை கிடையாது என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துவிட்டார். மேலும் தனியாக இட ஒதுக்கீடு வழங்க முடியாவிட்டாலும், ஏற்கனவே உள்ள 20 சதவீத மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிலிருந்து உள் ஒதுக்கீடு செய்து தந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று பாமக இறங்கி வந்துள்ளது. ஆனால், அதிமுக தரப்பில் பாமகவின் கோரிக்கை மீது பெரிய ரியாக்‌ஷன்கள் இல்லை. பாமகவின் இந்தக் கோரிக்கையை ஏற்றால், பிற சமுதாயத்தினரும் இதேபோல கோரிக்கைகள் வைக்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதால், இந்த விவகாரத்தில் அதிமுக அமைதி காப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவிடமிருந்து சாதகமான பதில் வராத நிலையில், வரும் 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு பாமகவின் அவசர நிர்வாக குழு கூட்டம் காணொலி காட்சி மூலம்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று பாமக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் பாமக வட மாவட்டங்களில் தனித்து போட்டியிடலாம் என்ற ஆலோசனையும் நடத்தி வருவதால், இந்த முடிவை எடுக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.