திமுகவுடன் கூட்டணி சேர எடுத்த முயற்சிகள் வீணாகப் போனதால், அதிமுகவுடன் கூட்டணிக்கு பாமக தள்ளப்பட்டுவிட்டது.

கடந்த காலங்களில் எல்லாம் திமுக கூட்டணில் பாமகதான் முதலில் இடம் பிடிக்கும். பாமகவை கூட்டணியில் வைத்துகொள்ள கருணாநிதி எப்போதுமே ஆர்வம் காட்டுவார். வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள பாமகவை வைத்து வெற்றியை அறுவடை செய்ய கருணாநிதி திட்டமிடுவார். இதனால், கூட்டணியில் முதல் மாலை பாமகவுக்கு சாற்றப்படும். ஆனால், இந்த முறை மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக டிசம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியிட்டது. 

கடந்த காலங்களில் பெரும்பாலும் ஆளுங்கட்சிகளைத் தவிர்த்து எதிக்கட்சிகளுடன்தான் கூட்டணி அமைத்து பாமக தேர்தலில் களமிறங்கியிருக்கிறது. 2011 சட்டப்பேரவை, 1999 நாடாளுமன்றத் தேர்தலை தவிர்த்து மற்ற காலங்களில் திமுக, அல்லது அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் கூட்டணி அமைத்திருக்கிறது. எனவே இயற்கையாக இந்த முறையும் பாமக திமுக கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. பாமகவிலும் திமுக கூட்டணியை எல்லோரும் விரும்பியிருக்கிறார்கள். குறிப்பாக அன்புமணி ராமதாஸ் திமுகவுடனான கூட்டணியை விரும்பியதாக தகவல்கள் வெளியாகின. 

இதேபோல வட மாவட்ட திமுக தலைவர்களும் கூட்டணிக்குள் பாமகவை கொண்டு வர ஆர்வம் காட்டிவந்தார்கள். ஆனால், தொடக்கம் முதலே பாமகவை கூட்டணிக்குள் சேர்ப்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை என்கின்றன கட்சி வட்டாரங்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வட மாவட்டங்களில் திமுக கணிசமாக வெற்றி பெற்றது. இத்தனைக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே இருந்தது. இதர சிறு கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றதால், பாமகவை கூட்டணியில் சேர்க்க ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள் திமுகவினர். 

மேலும் பாமகவை கூட்டணியில் சேர்த்தால், குறைந்தபட்சம் 5 தொகுதிகளைக் கேட்பார்கள். வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை கொடுக்க வேண்டியிருக்கும். வட மாவட்டங்களில் திமுகவும் செல்வாக்குடன் உள்ள நிலையில், பாமகவுக்கு ஏன் தொகுதிகளை வழங்க வேண்டும் என்ற இயல்பாக எழுந்த கேள்வியும் கூட்டணியைத் தவிர்க்க ஒரு காரணம் என்றும் திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், தினகரனின் ஓட்டுப் பிரிப்பு தங்களுக்கு சாதகமாகும் என்றும் திமுக திட்டமிடுகிறது. 

இதுபோன்ற சூழ்நிலையில் தற்போதைய கூட்டணியே போதும் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வரவைத்துள்ளது. திமுகவுடன் கூட்டணிக்கான எந்த அறிகுறியும் வெளியாகத நிலையில்தான், தற்போது அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாமக தொடங்கியிருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதை அன்புமணி ராமதாஸும் உறுதிசெய்திருக்கிறார். எனவே அதிமுக - பாமக உறுதியாகி இருக்கிறது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவை கூட்டணியில் சேர்க்க கருணாநிதி எடுத்த முயற்சிகள் வீணாகப் போனதைப்போல, தற்போது திமுக கூட்டணியில் சேர பாமக எடுத்த முடிவுகளும் வீணாகி போய்விட்டன.