நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி பற்றிய செய்திகள் வெளியாகிவரும் நிலையில், ராமதாஸ் பேசிய பழைய சங்கதிகளை எடுத்துக்கூறு பாமகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இதுப்பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு அவரது முக நூல் பக்கத்தில் எழுதியுள்ள விவரங்கள்:   

* 2014-2015ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை கடந்த 2014 பிப்ரவரி 10ஆம் தேதி, பாமகவின் தலைவர் மருத்துவர் ராமதாசு வெளியிட்டார். அப்போதுஅவர் பேசும்போது, “கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிடக்கட்சிகளோடு கூட்டணி கிடையாது” என்று முழங்கினார். ஆனால், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்தார்.

* டிசம்பர் 5, 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா அம்மையார் இறந்த பிறகு பாமக ராமதாசு வெளியட்டுள்ள அறிக்கையில், “சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறக்கக் கூடாது.  இது சட்டப்பேரவையின் மாண்புக்கு எதிரானது. திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி அவர்கள் வருவதாக அறிவித்துள்ளார். ஒரு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவரின் படத்தை திறக்க பிரதமர் வரக்கூடாது” என்று அறிக்கை விடுத்தார். 

* அதுமட்டுமல்ல,பிப்ரவரி 12ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்தை திறக்கக் கூடாது என்று திமுக தரப்பில் வழக்கு தொடுத்தபோது, பாமகவும் உடனடியாக வழக்கு பதிவிட்டு ஆவேசமாக ஊழல் குற்றவாளிக்கு எதிராக பேசினார்கள். “ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட இந்த அதிமுக அரசு நீடிக்கக்கூடாது, இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும்” என்று ராமதாசு வழக்கம் போல ஆவேச அறிக்கை வெளியிட்டார்.

* அத்தோடு நிற்காமல், கடந்த டிசம்பர் 9, 2017ஆம் ஆண்டு, மருத்துவர் அன்புமணி ராமதாசு தனது அடிப்பொடிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். 15 பக்கங்களை கொண்ட ஊழல் பட்டியல் ஒன்றை ஆளுனரிடம் அன்புமணி வழங்கினார். அதிமுக அமைச்சர்கள் 24 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுள்ளதாக பகிரங்கமாக சொன்னார் அன்புமணி. 

மணல், தாதுமணல், கிரானைட், மின்வாரியம், குட்கா,பள்ளிக்கல்வித் துறை, வாக்கிடாக்கி என அந்த ஊழல் பட்டியலில் இவ்வளவு ஊழல்களை கொடுத்துவிட்டு வெளியே வந்தார் அன்புமணி. ஆனால், இப்போது ராமதாசு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக வழக்கம் போல மானங்கெட்டுப்போய் கூறுகிறார். அதிமுக அரசையும் தமது தலைவி ஜெயலலிதா குறித்தும் மிக மோசமாக வெறுப்பை கக்கிய ராமதாசுடன் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் திருவாய் மலர்ந்திருப்பது அவர்களது மானங்கெட்ட செயலாகத்தான் பார்க்க முடிகிறது. மானமும் வெட்கமும் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. இவ்வாறு வன்னி அரசு முக நூல் பதிவில் எழுதப்பட்டுள்ளது.