Asianet News TamilAsianet News Tamil

கன்னியாகுமரிக்கு நாளை பிரதமர் வருகை; தேசிய பேரிடர் பகுதியாக அறிவிப்பாரா? விளக்குகிறார் பொன்.ரா...

PM to visit Kanyakumari tomorrow says pon.ra
PM to visit Kanyakumari tomorrow says pon.ra
Author
First Published Dec 18, 2017, 8:18 AM IST


கன்னியாகுமரி

கன்னியாகுமரிக்கு நாளை பிரதமர் நரேந்திரமோடி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்க வருகிறார் என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கலாமா? என்ற முடிவை பிரதமரே  எடுப்பார் என்றும்  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.இராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியது: "‘ஓகி‘ புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளைக் கேட்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 19–ஆம் தேதி (நாளை) கன்னியாகுமரி மாவட்டம் வருகை தருகிறார்.

இதே போல பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும் பிரதமர் நரேந்திரமோடியும் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று சந்திக்க விரும்புகிறார்.

பிரதமர் வருகையையொட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட மீனவ மக்களையும், விவசாயிகளையும் நரேந்திரமோடி நேரில் சந்திப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.  

ஆனால், பிரதமர் இராணுவ ஹெலிகாப்டரில் வருவதால் அந்த ஹெலிகாப்டர்களை நிறுத்தும் வசதி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இல்லை. இது தொடர்பாக ஆய்வும் நடத்தப்பட்டுவிட்டது.

இராணுவ ஹெலிகாப்டர்களை நிறுத்தும் வசதி கன்னியாகுமரியிலும், நாகர்கோவிலிலும் மட்டுமே இருக்கிறது. எனவே, பாதுகாப்பு கருதி பிரதமர் நரேந்திரமோடி பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்களை கன்னியாகுமரியில் சந்தித்து குறைகளை கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் பிரதமரிடம் தங்களது குறைகளை கூறலாம். மேலும் அவர்களை உள்துறை அமைச்சரை சந்திக்க டெல்லிக்கு அழைத்துச் செல்லவும் தயாராக உள்ளேன்.

‘ஓகி‘ புயல் பாதிப்பு தொடர்பாக மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி கருத்து கேட்கவுள்ளார். பலரது கருத்துகளை கேட்ட பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கலாமா? என்று பிரதமர் முடிவு எடுப்பார்.

பிரதமரின் வருகை கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போதைய பாதிப்புகளை தீர்க்கக் கூடிய வகையில் மட்டும் இல்லாமல் பிற்காலத்தில் புயல் வருவதற்கு முன்னே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.

பிரதமர் வருகையை வைத்து எந்த விதமான அரசியலும் செய்ய இயலாது. பிரதமர் வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டம் வர வாய்ப்புகள் உள்ளன.

ஓகி புயலில் சிக்கி காணாமல் போயுள்ள மீனவர்களின் விவரங்கள் என்னிடம் உள்ளது. காணாமல் போன மீனவர்கள் அனைவரும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால்தான் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை இதுவரை சொல்லவில்லை.

மாயமாகி உள்ள மீனவர்களை தேடும் பணியில் சின்னத்துறையை சேர்ந்த ஐவரும், தூத்தூரை சேர்ந்த இருவரும் என மொத்தம் ஏழு பேர் மீனவர்கள் கப்பற்படை அதிகாரிகளுடன் சேர்ந்து ஈடுபட்டனர். இவர்கள் சென்ற பெரிய கப்பல் ஆயிரம் கடல் மைல் தொலைவு வரை சென்று தேடியதாக மீனவர்களே தெரிவித்து உள்ளனர். காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். மீனவர்கள் சென்ற படகுகள் இன்னும் பிற மாநிலங்களில் இருக்கின்றன. அவற்றை கொண்டு வருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பியான் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 8 ஆண்டுகள் ஆகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி இருக்கிறேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைப்பதற்காக மத்திய குழுவினர் நான்கு இடங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர்தான் துறைமுகத்தை இனயத்தில் அமைத்தால் சரியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று சொல்வதால் வேறு இடத்தில் துறைமுகம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

துறைமுகம் இனயத்தில் அமையாமல் வேறு பகுதியில் அமைக்கப்படுமேயானால் துறைமுகத்தை இழந்துவிட்டோமே என்று பத்து ஆண்டுகளுக்கு பிறகு இனயம் மக்கள் வருத்தப்படுவார்கள். இனயம் துறைமுகம் அமைக்கப்பட்டு இருந்தால் புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்திருக்கலாம்"  என்று அவர் கூறினார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios