காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் செய்து வரும் மத்திய அரசை கண்டித்து, பிரதமர் மோடிக்கு எதிராக சென்னையில் இன்று பல்வேறு அமைப்புகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் டெபெக்ஸ்போ-2018 என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியை முறைப் படி தொடங்கி வைத்து பார்வையிடுதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மோடி வருகையால் காலை முதலே சென்னை பெருநகரம் பரபரப்படைந்துள்ளது. 

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டப் போவதாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளதால் காலை முதலே சென்னை மாநகரம் பரபரப்பாகவே காணப்பட்டது. மோடியின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. சின்னமலையிலிருந்து ராஜ்பவன் நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்போவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. மேலும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று ஒருநாள் துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதேபோல, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவைத் தலைவரான இயக்குநர் பாரதிராஜா, சீமான், பெ.மணியரசன், தமிமுன் அன்சாரி, உ.தனியரசு, கருணாஸ், அமீர் உள்ளிட்டோர் இன்று சென்னை விமான நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமும் பரபரப்பு அதிகரித்தது. 

விமான நிலையப் பகுதியில் பாரதிராஜா தலைமையில் திரண்டு வந்த தொண்டர்கள் அனைவரும் மோடிக்கு எதிராக உணர்ச்சிகரமாக கோஷம் போட்டனர். தமிழகத்திற்கு தண்ணீர் வாங்கித்தராத மோடியே  அப்படியே திரும்பிப் போ, என்று கோஷமிட்டனர். மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விளம்பர பதாகைகள் மீது ஏறி அபாயகரமான வகையில் போராட்டம் நடத்தியவர்களிடம் பாரதி ராஜா கீழே இறங்குமாறு கோரிக்கை விடுத்தார். அவர்களும் அதை ஏற்று  கீழே இறங்கினர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். "தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றாத மோடியே திரும்பி போ" என்றும் அவர்களுக்கு பச்சைக் கொடி காட்டுவோம் என்று பேசிய தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாரதிராஜா உள்ளிட்டோர் கோஷமிட்டனர். இதையடுத்து பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர். 

இதேபோல் பரங்கிமலையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும், விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற சீமான் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.