Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

pm ops-meet
Author
First Published Dec 19, 2016, 8:23 PM IST


பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் திரு. O. பன்னீர்செல்வம், டெல்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து, வர்தா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்‍கு நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்‍கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார். வர்தா புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்‍க 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும் உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிதியில் இருந்து வழங்கவேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

தமிழக முதலமைச்சர் திரு. O. பன்னீர்செல்வம் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற அவரை விமான நிலையத்தில் மக்‍களவை துணை சபாநாயகரும், கழக கொள்கை பரப்புச் செயலாளருமான டாக்‍டர் மு. தம்பிதுரை உள்ளிட்டோர் வரவேற்றனர். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்‍கும் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், இன்று மாலை பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். 

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா மறைவைத் தொடர்ந்து, தமிழகமே துயரத்தில் ஆழ்ந்திருந்தபோது, நேரில் வந்து ஆறுதல் தெரிவித்ததற்காக பிரதமருக்‍கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் தலைமையையும், வழிகாட்டுதலையும் தமிழகம் இழந்து நிற்கும் நிலையில், தமிழக அரசு மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் கொள்கை மற்றும் லட்சியங்களை தொடர்ந்து நிறைவேற்றும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் வர்தா புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இதில், வர்தா புயல் தாக்‍கியதால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்‍க 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் நிதி அளிக்‍கவேண்டும் - உடனடியாக பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்‍கித் தரவேண்டும் என்றும் அப்போது முதலமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு "பாரத ரத்னா" விருது அளிக்க வேண்டியும், அவரது முழு திருவுருவ வெண்கலச் சிலையினை, நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கவும் வலியுறுத்தி மனுக்‍களை அளித்தார்.

பிரதமருடனான சந்திப்புக்‍குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் நலன்சார்ந்த முக்‍கிய கோரிக்‍கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios