PM Modis Praise Of Deve Gowda Will Further B Team Theory
உங்களுக்கு முன்னால் குனிந்து நிற்கும் 75 வயதுடைய மனிதருக்கும் எப்படி மதிப்பளிக்கிறீர்கள்? நீங்கள் கொடுக்கும் மரியாதை இந்த நாட்டுக்கே தெரியும் என சித்தராமையா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12–ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சியை வெற்றி பெற செய்ய கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ரகசிய கூட்டணி அமைத்துள்ளதாக தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஹாசனில் நடைபெற்ற கூட்டத்தில் கூட ஜனதா தளம்(எஸ்) பா.ஜனதாவின் ‘பி டீம்‘ என்று ராகுல் காந்தி சாடினார். இந்நிலையில் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ள பிரதமர் மோடி முதல்நாளிலே தேவேகவுடாவை நாடும் வகையில் பேசினார்.
உடுப்பியில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரசை கடுமையாக தாக்கி பேசினார். தனது பேச்சின் இடையே ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவை திடீரென மோடி புகழ்ந்து பேசினார். பிரதமர் மோடி பேசுகையில் “நாட்டின் உயர்ந்த தலைவர்களில் தேவேகவுடாவும் ஒருவர். அத்தகைய மதிப்புமிக்க தலைவரை காங்கிரஸ் தலைவர் மரியாதை குறைவாக பேசுகிறார்.

ஆனால், நான் அவ்வாறு பேசுவது இல்லை. தேவேகவுடா எனது வீட்டுக்கு வந்தால், வாசல் வரை வந்து வரவேற்று அழைத்து செல்வேன். அதேபோல் புறப்பட்டு செல்லும்போது கூட கார் வரை வந்து வழியனுப்பி வைப்பேன். நான் அவரை மதிக்கிறேன் என்றார். தேவேகவுடாவை மோடி புகழ்ந்து பேசி இருப்பதன் மூலம் சித்தராமையா கூறியது போல் பா.ஜனதா, ஜனதா தளம் கட்சிகள் இடையே ரகசிய கூட்டணி இருப்பது உண்மையா? வலுத்துள்ளது.
தேவேகவுடாவை ராகுல் காந்தி மரியாதை குறைவாக பேசிவிட்டார் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ள நிலையில், யாருக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என சித்தராமையா பிரதமர் மோடிக்கு பதிலடியை கொடுத்து உள்ளார். மோடியின் ஒவ்வொரு சாடலுக்கும் காங்கிரஸ், சித்தராமையா தொடர்ச்சியாக டுவிட்டரில் பதிலடியை கொடுத்து வருகிறது.

தேவேகவுடாவிற்கு மரியாதை அளிப்பது தொடர்பாக மோடிஜி அவர்களே, நீங்கள் இலவசமாக அறிவுரை வழங்கி வருகிறீர்கள். உங்களுடைய தலைவர் அத்வானிக்கும், 2014-ல் எப்படி தேவேகவுடாவிற்கும் மதிப்பளித்தீர்கள் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். உங்கள் முன்னால் குனிந்து நிற்கும் 75 வயதுடைய மனிதருக்கு நீங்கள் எப்படி மதிப்பளிக்கிறீர்கள்? என சித்தராமையா கேள்வியை எழுப்பியுள்ளார், மேலும் எடியூரப்பா மோடிக்கு முன்னால் குனிந்து கையை பிடித்து இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
