பிரதமர் மோடி அமெரிக்காவில் ஒரு வாரம் சுற்று பயணம் மேற்கொண்டு இருந்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பிரதமர் மோடி இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி இருந்தார். 27ம் தேதி ஐ.நா சபையில் உரை நிகழ்த்திய பிரதமர் நேற்று இரவு இந்தியா திரும்பினார்.

இந்தநிலையில் சென்னை கிண்டியில் இருக்கும்  ஐ.ஐ.டி யில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்திய ஹக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் ஐ.ஐ.டியின் பட்டமளிப்பு விழாவும் நாளை நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிண்டியில் இருக்கும் ஐ.ஐ.டி வளாகத்திற்கு காலை 9.15 மணியளவில் வருகிறார். அங்கிருந்து சென்னை ஆராய்ச்சி பூங்காவில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். தொடர்ந்து புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

காலை 11.40 மணியளவில் ஐ.ஐ.டியில் நடைபெறும் 56 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பிரதமர் சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் ஆளுநர் பன்வரிலால் ப்ரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பிற்பகலில் தனி விமானம் மூலம் பிரதமர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.