உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 70 ஆயிரத்தை கடந்துள்ளது. அந்நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் தற்போது வரை 2,200 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மார்ச்  24ஆம் தேதி முதல் முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதி நிறைவடைந்தது நிலையில் அதை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

அதன்படி மே 3ம் தேதி வரை தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவுதல் தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தற்போது சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரடங்கு நிறைவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் கட்டுப்படுத்த முடியாத வண்ணம் அதிகரித்து வருகிறது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய,மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொளி மூலம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.

இந்த நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது கொரோனா பரவுதல் குறித்தும் அவற்றை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட கூடும். மேலும் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு நிறைவடையுமா? அல்லது மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்தும் பிரதமர் மோடி கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.