PM Modi scared of me says CM Siddaramaiah

பா.ஜனதா கட்சி நடத்துவது மாற்றத்துக்கான பேரணி அல்ல, அது சமூகத்துக்கு அவர்கள் செய்த பாவத்துக்கு பாவம் மன்னிப்பு தேடும் பேரணியாகும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கடுமையாக குற்றம்சாட்டினார்.

தேர்தல்

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இப்போது இருந்தே காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதா கட்சியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளன.

பிரசாரம்

பெங்களூரு நகரில் பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ‘நவ கர்நாடக நிர்மான பரிவர்த்தனா’ பேரணி நடந்தது. இந்த பேரணியை கடுமையாக விமர்சனம் செய்து முதல்வர் சித்தராமையா பேசியுள்ளார்.

பெங்களூரில் உள்ள அவரின் இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

பாவ மன்னிப்பு

பாரதியஜனதா கட்சி நடத்தும் பேரணி ஒன்றும் மாற்றத்துக்கானது அல்ல. சமூகத்தில் மக்களுக்கு செய்த பாவங்களுக்கு, பாவமன்னிப்பு தேடும் பேரணியாகும். பேரணியில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள்?. எடியூரப்பா, அமித் ஷா . இவர்கள் இருவரும் சிறையில் இருந்தவர்கள்தானே. இவர்கள் என்ன மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும்.

மீண்டும் காங். ஆட்சி

சமூகத்தில் உள்ள ஒற்றுமையை பா.ஜனதா அழித்து வருகிறது. கர்நாடகவில் உள்ள மக்கள் காங்கிரஸ் கட்சியைத்தான் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என தங்கள் மூளையில் பதிவு செய்துவிட்டார்கள். பா.ஜனதா ஆட்சியின் போது ஊழல் செய்தவர்களை மக்கள் மறக்கமாட்டார்கள்.

முதிர்ச்சி அடைந்தவர்கள்

உத்தரப்பிரதேசத்தைப் போல், அல்லது மற்ற தென் இந்திய மாநிலத்தைப் போல் அல்லாமல், கர்நாடக மக்கள் அரசியல் ரீதியாக நன்கு முதிர்ச்சி அடைந்தவர்கள். அவர்கள் உணர்ச்சி வசப்படமாட்டார்கள், இந்துத்துவா கொள்கைகள் மூலம் மக்களை மாற்றுவது என்பது சாத்தியமில்லாதது.

யாருக்கு நல்லகாலம்

மத்திய அரசு நல்லகாலம் பிறந்துவிட்டது(அச்சே தின்) என்கிறது. பிரதமர் மோடியும் நல்ல காலம் குறித்து மக்களுக்கு சத்தியம் செய்துள்ளார். ஆனால், மூன்றரை ஆண்டுகளுக்கு பின், நல்லகாலம் என்பது அதானி, அத்வானி, அமித் ஷாவுக்கும், ஜெய் ஷாவுக்கும் மட்டுமே வந்துள்ளது.

குஜராத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜி.எஸ்.டி. வரியில் சிறிய மாற்றங்களையும், சலுகைகளையும் பா.ஜனதா அரசு கொண்டுவந்துள்ளது.

திப்புசுல்தான்

மாநிலத்தில் திப்பு சுல்தான் பிறந்தநாள் கொண்டாடுவதை பா.ஜனதா சர்ச்சையாக்கி இருக்கிறது. கர்நாடக மக்கள் திப்பு சுல்தானை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர் இந்துக்களுக்கு எதிராக இருந்தால், சிருங்கேரி மடத்துக்கும், நஞ்சுங்கூடு கோயிலுக்கும் உதவி இருக்கமாட்டார். கர்நாடக மாநிலம் முதல்மாநிலமாக இருக்கிறதென்றால் அதற்கு திப்புசுல்தான்தான் காரணம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.