முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி கூறியது பொய் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லியத் தாக்குதல் நடத்தியதை பாஜக தன்னுடைய ஆட்சியின் சாதனையாக தேர்தல் பிரசாரத்தில் பேசிவருகிறது. பாஜகவின் இந்தப் பிரசாரத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மன்மோகன் சிங்  தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியில், 6 முறை துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறினார். துல்லியத் தாக்குதல் நடந்த தேதியையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தானில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, துல்லிய தாக்குதல் நடத்தியதாக கூறும் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி தந்திருக்கிறார். சிகாரில் நடந்த பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசும் போது, “4 மாதங்களுக்கு முன்பு ஒரு காங்கிரஸ் தலைவர் தங்களுடைய ஆட்சியில் 3 முறை துல்லியத் தாக்குதல் நடந்ததாக கூறினார். இப்போது இன்னொரு தலைவர் 6 முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகிறார். மே 19 அன்று தேர்தல் முடிவடைவதற்குள், இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தாலும் ஆச்சரியமில்லை.
காங்கிரஸ் கட்சி காகிதத்தில்தான் துல்லிய தாக்குதல் நடத்தியிருப்பார்கள். அதனால் யாருக்கு என்ன பயன்? பாஜக ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததை காங்கிரஸ் கட்சி கேலி செய்தது. அதை முழுமையாக எதிர்த்தனர். இப்போது நாங்களும் துல்லியத் தாக்குதல் நடத்தினோம் என்று கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது எல்லாமே பொய்தான். காங்கிரஸ் தலைவர்கள் வீடியோ கேம்ஸ் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அதில் தாக்குதலை ரசித்தவர்கள், அதை விளையாட்டு என்று நினைக்கிறார்கள் என கருதுகிறேன்.” என்று காங்கிரஸ் கட்சியை மோடி விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டார்.