Asianet News TamilAsianet News Tamil

திராவிட ஸ்டாக்கிஸ்ட்களின் ஒன்றிய பேச்சுக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வையுங்க.. பொங்கும் கிருஷ்ணசாமி..!

மத்திய அரசும், பாஜகவும் ஏன் இவர்களைப் புரிந்து கொள்வதிலும், இவர்களுடைய உள்நோக்கத்தை அறிந்து கொள்வதிலும் தவறுகிறார்கள்? என்று தெரியவில்லை. திமுகவின் சூழ்ச்சிக்கு பாஜகவும், மத்திய அரசும் அடிபணிகிறதோ? அல்லது அதற்குள்ளும் எதாவது அரசியல் இருக்கிறதோ? என்ற சந்தேகம் எழாமல் இல்லை. கருப்புக் கொடி இல்லை; பலூன்கள் இல்லை; எடுபிடிகளும், கைத்தடிகளும் அறிவித்திருந்த போராட்டங்களும் நடைபெறவில்லை. 

PM Modi put an end to the ondriya arasu speech..Krishnasamy
Author
Tamil Nadu, First Published May 28, 2022, 11:15 AM IST

பிரதமர் பங்கேற்ற அரசு விழாவில் ஸ்டாலின் நடந்து கொண்டதைப் போல தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறக்கூடிய அரசு விழாக்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று இதுபோன்று பேசினால் நிலைகள் என்னாகும்? என கிருஷ்ணசாமி  கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மத்திய அரசின் நேரடி முதலீடு, மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பின் மூலமும் நிறைவு செய்யப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காக பாரத பிரதமர் மோடி அவர்கள் 26.05.2022 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் கர்நாடகா மற்றும் ஆந்திரா முதலமைச்சர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர்.
2019-ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த மோடிக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகளால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கருப்புக் கொடிகள் கொண்டு நிரப்பப்பட்டன; ஐ.ஐ.டி வளாகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தபோதும்  அவர் கண்களில் பட வேண்டும் என்பதற்காக ஆகாயத்திலும் கருப்பு பலூன்களை பறக்க விட்டார்கள். ஐஐடி-க்கு மாற்றுப்பாதையில் சென்ற போதும் கருப்புக்கொடி காட்டப்பட்டது. 

இது போன்ற எதிர்ப்புப் பிரச்சாரங்களின் மூலம் தான் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டது; 2021 சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடித்துக் கொண்டார்கள். 2021 மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்ற தினமே டிவிட்டரில் ‘Belongs to the Dravidian stock’ எனப் பதிவிட்டுப் பிரிவினை விதையை ஸ்டாலின் ஊன்றினார். அதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடத்தில் இந்திய அரசு - மத்திய அரசு என்று அழைக்கப்பட வேண்டிய அனைத்து இடங்களிலும்; இந்தியா ஒருமித்த தேசம் அல்ல, அது ’பல நாடுகளின் கூட்டமைப்பு’ எனச் சித்தரிக்க கூடிய வகையில் அரசு விழா மேடைகளிலும், அறிக்கைகளிலும், சட்டமன்றத்திலும் ’ஒன்றிய அரசு’ எனத் தொடர்ந்து திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் பதிவு செய்து வருகிறார்கள். பிரதமர் பங்கேற்ற கூட்டத்திலும் அதேபோன்று ஒன்றிய புராணத்தையே திரும்பத் திரும்ப ஸ்டாலின் பாடினார். ’ஒன்றிய அரசு என்பது வெறும் வார்த்தையல்ல, அது பிரிவினையின் அடையாளம்’ என்பது குறித்து உள்துறை அமைச்சர், மாநில ஆளுநர் ஆகியோருக்கு நாம்  பலமுறை விரிவாகக் கடிதம் எழுதியும் அது குறித்து அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எனத் தெரியவில்லை. 

ஸ்டாலின் இன்னும் நான்கு வருடத்திற்கு இந்த பதவியில் இருக்கலாம். ஆனால், அவரைக் காட்டிலும் தமிழ் மக்களும், இந்திய தேசமும் பெரிது. திமுகவாலோ, அவர்களின் கூட்டணிக் கட்சிகளாலோ இந்திய தேசம் உருவாக்கப்பட்டது அல்ல. பாரதத் தாயின் பல்லாயிரக்கணக்கான புதல்வர்களால் தங்கள் இன்னுயிரை நீத்துக் கட்டியமைக்கப்பட்டதே  இந்த ’பாரத தேசம்’. அதைப் போற்றி பாதுகாப்பதற்காகவே இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய, மாநில அரசுகள் அமைய அது வழிவகை செய்கிறது. எந்த அரசியல் சாசனம் வழங்கிய உரிமையால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததோ, அந்த அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிராகப் பேசவோ, எழுதவோ, செயல்படவோ எக்கட்சிக்கும் அதிகாரம் இல்லை. ஆனால், திமுக தொடர்ந்து பிரிவினை எண்ணத்தை  தூபமிட்டு வளர்க்கிறது. ஏப்ரல், 2019 போல, இம்முறை பிரதமர் மோடி அவர்களின் நிகழ்ச்சிக்குக்  கருப்புக் கொடிகள் இல்லை; கருப்பு பலூன்கள் இல்லை; ஆர்ப்பாட்டங்கள் இல்லை. ஆனால் ஸ்டாலின் பேச்சில் தேசத்திற்கு எதிரான முழக்கங்களே ‘மேலோங்கி’ நின்றது.

மதுரவாயல் சாலை மேம்பாடு, ரயில் பாதைகள் விரிவாக்கம், ரயில் நிலையங்கள் புதுப்பித்தல், சென்னை – பெங்களூர் சாலை விரிவாக்கம், மெரினா கடற்கரை, ஏழைகளுக்கு வீடுகள் உள்ளிட்ட ரூ 31,500 கோடி மதிப்பிலான  பல திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். அவர் எதற்காக வந்திருக்கிறார் என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கூடுதலாக என்னென்ன திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதைப்பற்றி ஒரு மாநில முதலமைச்சராக ஸ்டாலின் ஒரு வரி கூட அந்நிகழ்ச்சியில் பேசவில்லை. ’சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும்  மின் மயமாக்கப்பட்ட இரட்டை இருப்புப் பாதையும், தனியாக சரக்கு ரயில் பாதையும் அமைக்கப்பட வேண்டும்’ என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட நெடுநாளைய கோரிக்கை. ஆனால் அதைப்பற்றி ஸ்டாலின் பேசவில்லை.வாஜ்பாய் காலத்தில் தமிழகத்தில் போடப்பட்ட பல நான்குவழிச் சாலைகளை 8 வழிச்சாலைகளாகவும், 12 வழிச்சாலைகளாகவும் மாற்ற மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கு பெற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டு இருந்தால்,அது நிறைவேற வாய்ப்பு இருந்திருக்கும்.ஆனால் அது குறித்துப் பேசவில்லை.

நூல் விலை உயர்வால் திருப்பூர் உள்ளிட்ட பல ஏற்றுமதி மையங்களில் உற்பத்தி தடைப்பட்டு இருக்கிறது. மூலப்பொருட்கள் கிடைக்காத காரணத்தினால் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. எனவே, அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தால் தமிழக மக்களுக்கு பயனுடையதாக இருந்திருக்கும். ஆனால், அது போன்ற எவ்வித ஆக்கப்பூர்வ நல்ல காரியங்களை பற்றி ஸ்டாலின் வாய்திறக்கவே இல்லை. ’கச்சத்தீவை மீட்க வேண்டுமாம்; அதிலும் இதுதான் சரியான சந்தர்ப்பமாம்’. அந்த கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது ’முத்துவேல் கருணாநிதி அவர்கள் தான்’ என்பதையும் சொல்லி இருந்தால் சரியானதாக இருந்திருக்குமல்லவா? ஜி.எஸ்.டி வரி விதிப்பு, வரி பாக்கிகள் பிரதமருடைய பார்வைக்கு உட்பட்டவை அல்ல. ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திலும், நிதியமைச்சரிடமும் பேசக் கூடிய பேச்சாகும். ’இந்திக்கு நிகராக தமிழ் மொழியும் அரசு மொழியாக்கப் படவேண்டும்; நீதிமன்றம் மொழியும் ஆக்கப்பட வேண்டும்’ என பேசுகிறார். ’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே மூத்த குடி’ என்று பன்னெடுங் காலமாக முன்பாக எடுத்துரைக்கப்பட்டு வரும் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் மண், தமிழ் அடையாளங்களை ’திராவிடத்தின்’ மூலம் அழிக்க எத்தணிக்கும் திராவிட ஸ்டாக்கிஸ்ட் அரசுக்கு ’தமிழ்மொழி’ பற்றிப் பேச என்ன அருகதை உண்டு?

இந்தியாவினுடைய வளர்ச்சிக்கே தமிழ்நாட்டினுடைய வருமானம்தான் பெரிதும் பயன்படுகிறது என பிதற்றுகிறார். நமது மாநிலத்தின் அடிப்படை கட்டுமானங்களான  துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் போக்குவரத்துகள், தங்க நாற்கர சாலைகள் போன்றவற்றில் மத்திய அரசு செய்த பெரும் முதலீடுகளால் தான் சென்னை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பெருநகரங்களும், தமிழகத்திலுள்ள பிற நகரங்களும் தொழில் வளத்தில் சிறந்து விளங்குகிறது; வருமானமும் அதிகரிக்கிறது என்பதை மறைத்துப் பேசுவது எவ்விதத்தில் நியாயம்? அரசு விழாவில் ’திராவிட மாடலை’ பற்றிப் பேசுகிறார்.  உலகில் எந்த நாடும் அந்நாட்டு மக்களுக்குக் கல்வி கொடுப்பதில்லையா? பெண்களைச் சமமாக நடத்துவதில்லையா? எல்லோருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதில்லையா? வீடு கொடுப்பதில்லையா? உலகத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவினுடைய தென்கோடியில் உள்ள ஒரு மாநிலத்தில் மட்டும் தான் இவை எல்லாம் நடைபெறுகின்றன என்பதைப் போன்று ‘திராவிட மாடல்’ பற்றி பேசுகிறார். அரசியல் பற்றி பேசுவதற்கான தருணமா அது? 

இன்னும் தமிழகத்தின் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ரேஷன் அரிசியால் தான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற நிலையில் இருக்கக்கூடிய கோடான கோடி தமிழ் மக்களுடைய ஏழ்மையை மறைத்து; சாதி, இன வேறுபாடுகளால் சிக்கித் தவிக்கின்ற நிலையை மறைத்து; அரசு மதுபான கடைகளால் குடிக்காரர்களாகிப் போன கணவன்மார்களாலும், பிள்ளைகளாலும் பெண்கள் அடையும் தொல்லை, துயரங்களை மறைத்து; ஆற்று மணல், செம்மணல், கருங்கல், கிரானைட் கொள்ளை என கனிமவளங்களில் நடைபெறக்கூடிய முறைகேடுகளை மறைத்து வெற்று சவடால், வீர சவடால் பேசி கொண்டும், போலி சமூக நீதியை மட்டுமே பேசிக்கொண்டும் இதுதான் ’திராவிட மாடல்’ என்று பிரதமர் முன்பு பேசுவதெல்லாம் எவ்வளவு பெரிய பிதற்றல்! ஒரு அரசு விழாவை இவ்வளவு அசிங்கமாக, அவமானகரமாக அரசியல் விழாவாக மாற்றலாமா?

’நீட்’டுக்கு விலக்கு வேண்டுமாம்? 2021 சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன், ’சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒரே கையெழுத்தில் நீட் விலக்கு பெறுவோம்’ என்று கூறியது என்ன ஆயிற்று? ஓராண்டு ஆயிற்றே? மீண்டும் பிரதமரிடம் மனு போட்டு மண்டியிட்டுத்தான்  நீட் விலக்கு பெற வேண்டுமா? 2017இல் தமிழகத்தில் நீட் தேர்வு அமலாக்கப்பட்ட போது, ஒரு மருத்துவராக அதனுடைய சாதக பாதகங்களை எடுத்துச் வைத்ததற்கே திமுகவினர் நம்மீது ’சங்கி’ முத்திரை குத்தினார்களே; சேற்றை வாரி வீசினார்களே, ’அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்’ என்பதற்கு இணங்க அன்று ’நீட்’ விலக்குக்காக எந்த மோடியை எதிர்த்துப் போராடினார்களோ, அதே மோடியிடமே இப்பொழுது மண்டியிட்டு மனு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறதே? கறுப்பும் – காவியும் ஒரே அரங்கிற்குள் சங்கமாகும் நிலை ஏற்பட்டுள்ளதே? டி – ஸ்டாக்கிடுகளின் இந்த சரணாகதிக்கு என்ன பட்டம் சூட்டுவது?

மத்திய அரசு எனக் குறிப்பிட வேண்டிய இடத்தில் ’ஒன்றிய அரசு’ என வலிந்து திரும்பத் திரும்ப ஸ்டாலின் கூறுகிறார். ‘India that is Baharat shall be a union of states – பாரத தேசம் ஒன்றுபட்ட தேசம்’ என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, ஸ்டாலின் மற்றும் திராவிட ஸ்டாக்கிஸ்ட்களின் ஒன்றியப் பேச்சுக்கு  பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அதை ஏன் பிரதமர் செய்யவில்லை என தெரியவில்லை? அரசியல் சாசனத்தில் ’கூட்டாட்சி’ என்று சொல்லப்பட்டதை தவறாக வியாக்கியானம் செய்து, இந்த தேசத்தினுடைய ஒற்றுமை - இறையாண்மையைச் சீர்குலைக்கும் திராவிட ஸ்டாக்கிஸ்டுகளிடமிருந்து பாரத தேசத்தைக் காப்பாற்ற இப்பொழுது மத்திய அரசு கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையெனில், அது நமது தேசத்திற்கே பேராபத்தாகவே முடியும். திமுகவின் கடந்த கால பிரிவினைவாத வரலாற்றைத் தெரிந்த பிறகும் கூட மத்திய பாஜக அரசு ஒரு மென்மையான அணுகுமுறையைக் கையாளுவதை தேச அபிமானிகளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

பிரதமர் பங்கேற்ற அரசு விழாவில் ஸ்டாலின் நடந்து கொண்டதைப் போல தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறக்கூடிய அரசு விழாக்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று இதுபோன்று பேசினால் நிலைகள் என்னாகும்? தேச ஒற்றுமைக்கு எதிராக இவ்வளவு வன்மத்தோடு பேசக்கூடிய ஒரு முதல்வருடைய தந்தையின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைக்க இந்திய ஜனாதிபதி வரவழைக்கப்பட்டார். இன்று இந்தியாவினுடைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஸ்டாலினின் தந்தையார் முத்துவேல் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறார். தங்களுடைய குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிகளில்  சத்தமில்லாமல், சாதுரியமாக நடந்து கொள்வது; அதற்கு எந்த நிலைக்கும் வளைந்து நெளிந்து போவது. ஆனால் மக்களுக்கான பொது நிகழ்ச்சிகளில் தங்களின் சுய ரூபத்தைக் காட்டுவது தான் ’திராவிட ஸ்டைல்’ அரசு போலும்! 8 கோடி தமிழ் மக்களுக்கான ஒரு அரசு விழாவை அரசியல் மேடையாக்கி விழாவில் பிரதமரை ஆத்திரமடையச் செய்து, தமிழ் மக்கள் - தமிழ்நாட்டின் மீது ஒரு கசப்புணர்வை உண்டாக்குவதையே நோக்கமாகக் கொண்டு ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். இதையெல்லாம் பாஜக புரிந்துகொண்டு இருக்கிறதோ? இல்லையோ? தெரியவில்லை. இத்தனை நடந்த பின்னரும்  வெங்கையா நாயுடு கருணாநிதி சிலையைத் திறந்து வைத்து புகழ் மாலை சூட்ட வருகிறார். ஆனால், யாரை? எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் ஸ்டாலின் மற்றும் அவருடைய குழுவினர் தெளிவாகவே இருக்கிறார்கள்.  

ஆனால் மத்திய அரசும், பாஜகவும் ஏன் இவர்களைப் புரிந்து கொள்வதிலும், இவர்களுடைய உள்நோக்கத்தை அறிந்து கொள்வதிலும் தவறுகிறார்கள்? என்று தெரியவில்லை. திமுகவின் சூழ்ச்சிக்கு பாஜகவும், மத்திய அரசும் அடிபணிகிறதோ? அல்லது அதற்குள்ளும் எதாவது அரசியல் இருக்கிறதோ? என்ற சந்தேகம் எழாமல் இல்லை. கருப்புக் கொடி இல்லை; பலூன்கள் இல்லை; எடுபிடிகளும், கைத்தடிகளும் அறிவித்திருந்த போராட்டங்களும் நடைபெறவில்லை. இதுவரை வெளியில் செய்து கொண்டிருந்த அரசியல் நாடகங்களை இம்முறை அரங்கிற்குள்ளே அரங்கேற்றி விட்ட திருப்தியோடு ஸ்டாலின் மனமகிழ்ந்து இருக்கக்கூடும். மத்திய அரசும், பாஜகவும் தமிழகத்தில் உள்ள நல்ல நண்பர்களை அடையாளம் காண்பதற்குப் பதிலாக யாரிடமோ எதையோ எதிர்பார்த்து காத்திருக்கிறார்களோ? பிரிவினை வாதிகளுக்கு இடம் தருகிறார்களோ? என்ற எண்ணமே தேசநலன் கொண்ட ஒவ்வொரு தமிழர்களின் உள்ளங்களிலும் எழுகிறது என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios