ராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பின்னர்தான் அவசர சட்டம் குறித்து பரிசீலிக்க முடியும் என்று பிரதமர் நரேந்திரமோடி முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார். 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்து அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் விசாரணையை எப்போது தொடங்குவது என்பது குறித்து இந்த வாரம் முடிவு செய்யப்படுகிறது. நீண்டகாலமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் அதற்கு தீர்வு காண வேண்டும் என இந்து அமைப்புகள் கோரி வருகின்றன. 

இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள மோடி ‘’ அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை பொறுத்தவரை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். நீதிமன்ற நடவடிக்கை முடிந்த பிறகே அரசு தனது பணியை தொடங்க முடியும். அதன் பிறகே சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த விவகாரத்தில் அவசரப்படவில்லை. இந்த விவகாரத்தில் சட்டத்துக்குட்பட்டே தீர்வு காணப்படும் என கடந்த தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெளிவாக தெரிவித்துள்ளோம்.

 

எனவே நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அதேசமயம் ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் வேண்டுமென்ற தலையிட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்துகிறது. நீதிமன்ற நடவடிக்கைகள் உரிய காலத்தில் முடிய விடாமல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தாமதப்படுத்துகின்றனர்’’ என அவர் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அவர் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக மவுனம் கலைத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.