திருப்பூர் வந்த பிரதமர் மோடி புதிய மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

திருப்பூரில் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். பின்னர் பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை,  ஆளுநர் பன்வாரிலால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதனால், 1.25 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் எண்ணூர் பி.பி.சி.எல் முனையம், மணலியில் சி.பி.சி.எல் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தை நாட்டுக்கு அர்பணித்தார். திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் நவீனமயமான விரிவாக்க கட்டட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.