தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று 66வது பிறந்தநாள். இதற்காக பல்வேறு தலைவர்கள் மற்றும் கட்சியினரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 60 நாட்களுக்கும் மேலாக முதல்வர் பதவியில் நீடித்து அவர் அதிமுகவில் ஏற்பட்ட அடுத்தடுத்த மாற்றங்களினால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.

அது முதல் தற்போது வரை சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கணிப்புகளையும் பொய்யாக்கி முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிச்சாமி நீடித்து வருகிறார். அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகித்து வரும் அவருக்கு  இன்று பிறந்தநாள். இதற்காக பிரதமர், துணை முதல்வர் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்திய பிரதமர் மோடி தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் அவர் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

அதே போல தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என கூறி உள்ளார்.