மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்கும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரி 27ஆம் தேதி மதுரை வந்த பிரதமர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு பாஜகவின் பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக இன்று பிற்பகல் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அரசு விழா கலந்துகொண்டார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் மதியம் 2.30 மணியளவில் கோவை விமான நிலையம் வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நிகழ்ச்சிகள் நடைபெறும் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு வந்தடைந்தார். இதற்காகப் பொதுக்கூட்ட மேடை அருகிலேயே ஹெலிபேட் அமைக்கப்பட்டது.

முதலில் அரசு விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள மேடைக்குச் சென்ற மோடி, சென்னை வண்ணாரப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான மெட்ரோ ரயில் சேவையைக் காணொலி காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார்.

இந்த  பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி; சகோதரர்களே இந்த திருப்பூர் மண்ணுக்கு நான் தலைவணங்குகிறேன். ஏனென்றால் இது தைரியத்திற்கான மண். திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை அவர்களுடைய துணிச்சல் இந்த நாட்டு மக்களுக்கு பெரிய உத்வேகத்தை தந்தது. ''மீண்டும் நமோ'' என்று சொல்கின்ற செய்தியை தாங்கிய டிசர்ட்களும், தொப்பிகளும்  இந்த  திருப்பூர் மண்ணில் இருந்துதான் உற்பத்தியாகி வந்து கொண்டிருக்கின்றன.


 
அதிகாரத்தை இடைத்தரகர்கள் சுற்றி வந்தது தற்போது பாஜக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் மீது அக்கறை இல்லாததால்தான் அந்த ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினர். தற்போதுள்ள ஆட்சியில் ஊழலுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆட்சியைதான் காமராஜர் விரும்பினார் எனப் பேசினார்.