பீகாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக அக்டோபர் 28 அன்று நடைபெற்றது. இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 3 (இன்று) நடைபெற்று முடிந்தது. மூன்றாம் கட்டத் தேர்தல் நவம்பர் 7 அன்று நடைபெற உள்ளது. மூன்றாம் கட்டமாக தேர்தல் நடக்கும் பகுதிகளில் பிரசாரம் முடிய இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பாஜக -ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடியும் முதல்வர் நிதிஷ்குமாரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 
காங்கிரஸ் -ஆர்.ஜே.டி. கூட்டணியை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,ஆர்.ஜே.டி. முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி பீகாரின் சஜர்சா பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “மக்களை நீண்ட நாட்கள் முட்டாளாக்க முடியாது. நாட்டில் காங்கிரசை மக்கள் எந்த நிலைமையில் வைத்திருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்... மக்களவை, மாநிலங்களவை என இரண்டையும் சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு இன்று 100 எம்.பி.க்கள்கூட கிடையாது. மக்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காங்கிரசை தண்டிக்கிறார்கள்.
நீங்கள் பாரத் மாதா கி ஜே என்றோ ஜெய் ஸ்ரீராம் என்றோ கூறுவதை சிலர் விரும்புவதில்லை. ஆனால், அவர்கள் எல்லோரும் இணைந்து வந்து பீகார் மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு தேர்தலில் உரிய பதிலடி கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.” என்று பிரதமர் மோடி பேசினார்.