பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் கூறிய காரணத்தைக் கேட்டால் வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கும்ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவர் எச்.கே. சிங். இவர் கடந்த தினங்களுக்கு முன்பு ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில், மக்களை மோசடி செய்ததாக பிரதமர் மோடி மற்றும அமித் ஷா மீது வழக்கு தொடர்ந்தார். இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 415 (மோசடி) மற்றும் 420 (நேர்மையின்மை), அதனுடன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 123(பி)ன் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சேர்க்கப்பட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மக்களிடம் வாக்குறுதியளித்த மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் எனத் தெரிவித்தார். ஆனால், வாக்குறுதி கொடுத்து மக்களை பிரதமர் மோடியும், அமித் ஷா ஏமாற்றி விட்டனர். 2019ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை திருத்த சட்டத்தை அறிமுகம் செய்தார். ஏனென்றால் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. குடியுரிமை திருத்த சட்டம் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது ஆனால் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொருவரின வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்ற வாக்குறுதியை ஏன் மதிக்கவில்லை? மக்கள் வாக்குகளை பெற தவறான வாக்குறுதிகளை அளிக்க கூடாது. அப்படி செய்தால் அது மக்களை மோசடி செய்வதாகும் என பிரதிநித்துவச் சட்டம் சொல்கிறது என வழக்கறிஞர் எச்.கே. சிங் வாதிட்டுள்ளார். இந்த வழக்கு மார்ச் 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

2014 நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தாக எச்.கே. சிங்கின் கோரிக்கை உண்மைக்கு புறம்பானது.  பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் அது போன்ற வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.