மதுரையில் சீமானிடம் விஜயலெட்சுமி குறித்து மட்டும் கேள்வி கேட்க கூடாது என்று செய்தியாளர்களிடம் அவரது தம்பிகள் சத்தியம் வாங்கிய பரிதாப நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக நடிகர் விஜயலட்சுமி சீமானை குறி வைத்து தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வருகிறார். சீமான் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததற்கு எதிராக முதல் வீடியோவை விஜயலட்சுமி வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி சீமான் எதிர்ப்பாளர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டது. ஒரு சில ஊடகங்களும் விஜயலட்சுமியின் வீடியோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பின. இதனால் விஜயலட்சுமி தினமும் ஒரு வீடியோ வெளியிட ஆரம்பித்தார்.

அதிலும் 10 வருடங்களுக்கு முன்னர் சீமான் – விஜயலட்சுமி ரிலேசன்ஷிப்பில் இருந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றை விஜயலட்சுமி வெளியிட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பத்திக் கொண்டு எரிந்தது. மேலும் அப்போது சீமான் தன்னிடம் எப்படி நடந்து கொள்வார், என்ன என்ன பேசுவார் என்று விஜயலட்சுமி வீடியோவில் சாரம் குறையாமல் பேச அதனை கேட்கவே நம்மவர்கள் குத்த வைத்து உட்கார ஆரம்பித்தனர். நமது வீடியோவுக்கு இப்படி ஒரு வரவேற்பா என்று தவறாமல் தினமும் ஒரு வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட தொடங்கியுள்ளார் விஜயலட்சுமி.

அதிலும் விஜயலட்சுமி முதலில் சீமானுக்கு எதிராக மட்டுமே வீடியோ வெளியிட்டு வந்த நிலையில் தற்போது சீமான் கட்சியை சேர்ந்த காளியம்மாள், ராஜீவ் காந்தி ஆகியோரையும் கிழித்து தொங்கவிட ஆரம்பித்துள்ளார். மேலும் சீமானின் சில ஆடியோக்களை வெளியிட உள்ளதாக கூறி நாம் தமிழர் தம்பிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். அந்த ஆடியோ எப்போது வெளியாகும் என்று அனைவரும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் நிலையில் இதைப்பற்றி எல்லாம் அண்ணன் சீமான் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

தனது வழக்கமான கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் சீமான் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்து விஜயலட்சுமி குறித்த கேள்விகளுடன் செய்தியாளர்கள் ஆஜர் ஆகினர். அப்போது அங்கு சீமானின் தம்பிகள் என்று கூறிக் கொண்டு சிலர் வந்தனர். அவர்கள் தான் அந்த செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு. அப்போது குறிப்பிட்ட சில டிவிக்களின் செய்தியாளர்களை தனியாக அழைத்துச் சென்று அண்ணன் சிஏஏ குறித்து மட்டும் தான் பேசுவார். அதனால் சிஏஏ குறித்த கேள்வியை மட்டும் கேளுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

அதற்கு அதெல்லாம் முடியாது, நாங்கள் செய்தியாளர்கள் நாங்கள் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று அந்த செய்தியாளர்கள் வாதம் செய்தனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தம்பிகள் அண்ணன் தங்கியிருந்த ரூமுக்குள் சென்று மீண்டும் வந்தனர். அப்போது செய்தியாளர் சந்திப்பு முழுக்க முழுக்க சிஏஏ பற்றியது தான், எனவே அண்ணன் அதைப்பற்றி மட்டும் தான் பேசுவார் என்று மீண்டும் கூறியுள்ளனர் தம்பிகள். அதற்கு அண்ணன் எதை வேண்டுமானாலும் பேசட்டும் ஆனால் கேள்விகள் நாங்கள் விரும்புவதைத்தான் கேட்போம் என்றனர் செய்தியாளர்கள்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாத தம்பிகள் பேசாமல் செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துவிடலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால் அண்ணனோ, மதுரையில் நான் செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும், மோடிக்கு எதிராக பேசியே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று யோசித்த தம்பிகள், நேராக வாதம் செய்த செய்தியாளர்களிடம் சென்று தயவு செய்து எங்களுடன் ஒத்துழையுங்கள் என்று கண் கலங்காத குறையாக கதறியுள்ளனர். இதனால் மனம் இளகிய செய்தியாளர்கள், சரி உங்கள் அண்ணனை வரச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கும் உடன்படாத தம்பிகள், அண்ணனிடம் விஜயலட்சுமி குறித்து கேள்வி கேட்கமாட்டோம் என்று சத்தியம் செய்யுங்கள் என்று சிணுங்கியுள்ளனர். இதனால் என்னடா இது வம்பாகப்போய்விட்டது, சரி தம்பிகள் நம்ம ஊர் என்று மனம் இளகி செய்தியாளர்கள் சத்தியம் செய்ய, அண்ணன் சீமான் ஒரு வழியாக வந்து சிஏஏவுக்கு எதிராக நரம்புகள் புடைக்க பேசிவிட்டு சென்றார்.