Asianet News TamilAsianet News Tamil

டார்ச்சர் செய்யாதீங்க ப்ளீஸ்... மறைந்த நடிகர் விவேக் எழுதிய உருக்கமான கடிதம்..!

அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம்.

Please don't do torture ... The heartfelt letter written by the late actor Vivek
Author
Tamil Nadu, First Published Apr 19, 2021, 11:30 AM IST

விவேக்குக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வனி என்ற இரு மகள்கள் உள்ளார்கள். மகன் பிரசன்னகுமார் 2015 அக்டோபரில் மர்மக் காய்ச்சலால் இறந்தார்.
பிரசன்னகுமார் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர், அவர் சென்னை வட பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மூளைத்தண்டுவட செயலிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சுயநினைவை இழந்த நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். பிற உறுப்புகளும் செயலிழந்த நிலையில் உயிரிழந்தார்.Please don't do torture ... The heartfelt letter written by the late actor Vivek

மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் இணையத்தளத்தில் விவேக் எழுதிய கட்டுரை:
சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன.

Please don't do torture ... The heartfelt letter written by the late actor Vivek

பிரசன்ன குமார் - என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன். அக்டோபர் 29 -ல் விடைபெற்றான். 14 வருடங்களின் வருடல் இனி என் நினைவுப்பரப்பில் என்றும் கதறல். இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? இத்தனைக்கும் அவன் நிறையப் பேசுபவன் அல்ல. அவன், அவனது பியானோ, அமர்சித்ரகதா, வீடியோ கேம்ஸ், கால்பந்து, குறிப்பிட்ட சில நண்பர்கள் என்ற ஒரு சிறிய வட்டம் அவன் உலகம்.
எப்போதாவது பேசுவான். கேமரா, பேட்டி என்றால் கூசுவான். அவனுக்கு எல்லாமே அவன் அம்மாதான். அந்த வளரிளம்பருவக் குழந்தைக்கு, அம்மாமேல் கால்போட்டுக்கொண்டால்தான் தூக்கம் வரும்.  

வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது மனிதருக்கு தோழமை பாப்பா! தெருவில் திரியும் நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்துவந்து, ‘இதை வளர்ப்போம் டாடி!’ எனும்போது கண்கள் மிளிர்ந்து நிற்பான். அவனுடன் நான் பேசிய பேச்சுகள் மிக மிகக் குறைவு. காரணம் அவன் பதில்கள் ‘ஓ.கே.’, ‘உம்’, ‘சரி’, ‘மாட்டேன்’ என ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும். ஃபோட்டோவுக்கு நிற்க மாட்டான்; கட்டாயப்படுத்தி நிற்கவைத்தாலும் முகத்தை அஷ்டகோணலாக்கி... அந்த ஃபோட்டோவை பயன்படுத்த முடியாமல் செய்துவிடுவான். அவனுக்குத் தெரியாமல், அவன் புத்தகம் படிக்கும்போது, பியானோ வாசிக்கும்போது, வீடியோ கேம்ஸ் விளையாடும்போது, தூங்கும்போது என எடுத்த ஃபோட்டோக்கள்தான் என் ஃபோனில் உள்ளன இப்போது. அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க நான் போராடிக்கொண்டிருந்தேன். அவனைத் திட்டியதில்லை, அடித்ததில்லை, ஏன், அவனைக் கொஞ்சியதும் இல்லை. காரணம் அவன் விடுவதில்லை. Please don't do torture ... The heartfelt letter written by the late actor Vivek

அவன் அம்மாவே அவனை முத்தமிட முடியாது. பிடிக்காது. விடமாட்டான். அது என்ன கூச்சமோ?! தன்னைச் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு புனிதம் இருந்தது. அவனை எல்லோருக்கும் பிடித்துப்போனது. இளையராஜா, அவனை அழைத்து மடியில் அமர்த்தி ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். ஏ.ஆர்.ரஹ்மான் அவனைப் பியானோ அருகில் நிற்கவைத்து ஃபோட்டோ எடுப்பார். ‘இவனுக்கு 18 வயசு வரும்போது முழு இசைக்கலைஞன் ஆகிவிடுவான்’ என்பார்(முந்திக்கொண்டானே!). ஹாரிஸ் தனது ஸ்டுடியோவைச் சுற்றிக் காட்டுவார். தன்னோடு அணைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். அவர் மகன் நிக்கோலஸும் இவனும் அப்துல் சத்தார் மாஸ்டரிடம் பியானோ கற்றுக்கொண்டிருந்தார்கள். 

அது ஒரு காலம். ஷுட்டிங் இல்லாத நாட்களில் நானே அவனை பியானோ கிளாஸுக்குக் கூட்டிச்செல்வேன். டீக்கடையில் பட்டர் பிஸ்கெட்டும், டீயும் வாங்கிக் கொடுப்பேன். அவன் அம்மாவுடன் சென்றால், இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்கள் கிடைக்காது என்பான். 
இந்த வருடம் ஏழாவது கிரேடு பியானோ எக்ஸாம் எழுத வேண்டியது. எட்டாவது கிரேடுடன் நிறைவடைகிறது. இப்போது அந்த பியானோ, வாசித்தவன் எங்கே போனான் என்று யோசித்துக் கிடக்கிறது. அவன் விளையாடிய ஃபுட்பால் உதைக்க ஆள் இல்லாமல் ஹாலின் மூலையில் உறைந்து கிடக்கிறது. அவன் விளையாடிய வீடியோ கேம்ஸ், வீணே கிடக்கிறது. தூசி படிந்த அவன் புத்தகங்கள், அயர்ன் செய்துவைத்த யூனிஃபார்ம்கள், பிடித்து வாங்கிய ஷூக்கள்... என வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் கசிந்துகொண்டிருக்கின்றன அவன் ஞாபகங்கள். தோட்டத்தில் உலவினாலும் தொடர்ந்து வரும் சோகங்கள். இதுவரை ‘புத்திர சோகம்’ என்பது ஒரு வார்த்தைத் தொடர் எனக்கு. இப்போதுதான் புரிகிறது அது வாழ்வைச் சிதைக்கும் பேரிடர். கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை. Please don't do torture ... The heartfelt letter written by the late actor Vivek

அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..! 
குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். 

உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்புக்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம். 

அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்! பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்’களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். 

பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதனங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்! பின் குறிப்பு: எப்போதுமே முத்தமிட அனுமதிக்காத என் மகன்... ஒரு முறை அனுமதித்தான். அவன் இறந்த பின், எரியூட்ட அனுப்பும் முன், அவன் நெற்றியில் ஒருமுறை முத்தமிட..!

ஒவ்வொரு சனிக்கிழமையும் சாயி பாபா கோவிலில் அன்னதானம் செய்து வந்தோம். வருகிறோம். அந்த அன்னதானத்தில் சிப்ஸ் கொடுக்குறது என்னோட பையன் பிரசன்னா. அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது கூட அன்னதானம் பண்றத நிறுத்தல. ரொம்ப விரும்பி அவன் அதை செய்றதைப் பாத்திருக்கேன். அதனால அவன் திரும்பி வர்ற வரைக்கும் அவனோட பணியை நானே  செய்யலாம்னு நெனச்சு, நான்தான் அப்போ சிப்ஸ் கொடுத்துட்டு இருந்தேன். எப்பொழுதும் நானே கொடுக்கும்படி ஆகுமென்று நினைக்கவில்லை.

வீட்டுல எப்பவாச்சும் இரவு கட்டில்ல உக்காந்து நாங்க ரெண்டு பெரும் தலையணை சண்டை போடுறது உண்டு. நான் ஃப்ரீயா இருக்கும்போது என்கூட சண்டை போட அவனும், அவன் கூட சண்டை போட நானும் விரும்புவோம். அவன் இறுதி நாட்களை எடுத்துக்கொண்ட மருத்துவமனை கட்டில், ரிமோட்டின் உதவியால் மேலும் கீழும் அசையுற மாதிரி இருந்துச்சு. அந்த சூழ்நிலையிலும் அந்தக் கட்டிலை ரிமோட் ஊஞ்சலா மாத்தி விளையாடிட்டு இருந்தோம்.  அந்த கட்டில் இப்போது அவனைத்தேடும். என் வீட்டுக் கட்டிலும், தலையணையும் எப்போதும் அவனைத் தேடும்.

‘The Good, The Bad and The Ugly’ என்றொரு இத்தாலிய சினிமா.  நான் வீட்டில் இருக்கும்போது யார் என்னை தொலைபேசியில் அழைத்தாலும் எனது பதில், பிரசன்னாவுடன்  ‘The Good, The Bad and The Ugly’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான். எத்தனை முறைதான் அந்தப் படத்தைப் பாப்பீங்க என்று அவர்கள் கேட்கும் கேள்வியின் பதிலை இப்போதுச் சொல்கிறேன்.  இசையமைப்பாளர் ‘என்னியோ மொரிக்கோன்’ இசையமைத்த அந்தப் படத்தின் பின்னணி இசைக்காகவே அத்தனை முறைப் பார்ப்பான் என் பிரசன்னா. அவனோடு சேர்ந்து நானும். இனி யாருடன் பார்ப்பேன்? யாருக்குப் புரியும் அவனது ரசனையும், அவன் ரசித்த அந்த இசையும்!Please don't do torture ... The heartfelt letter written by the late actor Vivek

நடிகன் என்ற கர்வம் சிறிதேனும் என்னிடம் அவ்வப்போது வெளிப்பட்டு விடும். நடிகனின் மகன் என்ற கர்வம் ஒருபோதும் அவனிடம் வெளிப்பட்டது கிடையாது. எங்கள் ஏரியா சிறுவர்களுடனேயே தொடர்ந்து விளையாடும் பழக்கம் உள்ள அவனுக்கு நண்பர்களும் அவர்களே. அடிக்கடி என்னிடம் பணம் வாங்கிக் கொள்வான். வாங்கும் பணத்தை என்ன செய்கிறான் என்று விசாரித்தபோது, இருபது ரூபாய்க்கு கிடைக்கும் டிவிடி - க்களை வாங்கி அதில் வீடியோ கேம்ஸ் ஏற்றி அவன் நண்பர்களுக்கு கொடுக்கிறான் என்று தெரிந்து சந்தோஷப்பட்டேன். சந்தோஷப்படுகிறேன்.

நேரத்திற்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. எப்போதாவதுதான் பேசும் அவன், அடிக்கடி பேசும் வார்த்தை. ‘அப்பா! தண்ணி குடிச்சீங்களா?’. என் கைபேசியில் ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கிறேன். நேரத்திற்கு தண்ணீர் குடிக்கச் சொல்லி அலெர்ட் செய்யும் என்னை அது. இப்போது அந்த அப்ளிகேஷன் ‘Please drink water Daddy by prasanna’ என்று என்னை அலெர்ட் செய்கிறது.  மனம் திறந்து : கடைசி முத்தம்! 
- நடிகர் விவேக்
 

Follow Us:
Download App:
  • android
  • ios