தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் முதன்முறையாக சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2.34 கோடி மதிப்பிலான பிளாஸ்மா வங்கி சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவால் பாதித்தவர்கள் குணமடைந்த பின் 14 நாட்கள் கழித்து பிளாஸ்மா தானம் செய்யலாம். கொரோனாவில் இருந்து குணமடைந்த 18-65 வயதுடையவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். இதேபோல, தமிழகத்தில் நெல்லை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்மா வங்கியை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தானமாக பெறப்பட்ட பிளாஸ்மாவை ஓர் ஆண்டு வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். ரெம்டெசிவிர் மருந்து பரிசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. மரண எண்ணிக்கை தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம்.  மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 என கண்டறியப்பட்டுள்ளது.  444 மரணங்களில் ஒரு சிலர் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால், கொரோனா உயிரிழப்பு 3 ஆயிர்ததை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.