அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலைக்குக்கீழ், ஜெயலலிதா என போர்டு வைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அது ஜெயலலிதா என தெரியவரும் என்றும் தமிழக காங். முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை, அவரது பிறந்தநாளான நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திறந்து வைத்தனர். இந்த நிலையில், அதிமுக அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை, அவரைப்போலவே இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன. 

அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை, இந்த சாயலில் உள்ளது! அவரைப்போல உள்ளது! என்று விமர்சனம் செய்து வருகின்றனர். 

இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜெ.வின் சிலையை வளர்மதி போன்றோருடன் ஒப்பிடுகிறார்கள். மனசாட்சி இல்லாத மிருகங்கள்தான் ஜெ.வின் புதிய சிலையை விமர்சிப்பார்கள் என்று கடுமையாக கூறியிருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக இன்று ஜெயக்குமார் கூறியுள்ளார். 

ஜெயலலிதாவின் சிலை குறித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள சிலையின்கீழ் இவர் தான் ஜெயலலிதா என போர்டு வைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அது ஜெயலலிதா என தெரியவரும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோட்டில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளரிடம் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், கமல் அரசியல் கட்சியை ஆரம்பித்து தெளிவாக பேசியிருக்கிறார். ஆனால், மேடையில் கெஜ்ரிவாலை பேசவிட்டது தவறு என்றார். கெஜ்ரில் காங்கிரஸ் மற்றும் திராவிட இயக்கத்தைப் பற்றி தவறாக பேசியிருக்கிறார் என்றார். நேற்று சென்னையில், ஜெயலலிதா அவர்களுடைய சிலையை திறந்திருக்கிறார்கள். அதற்குக்கீழே இவர்தான் ஜெயலலிதா என போர்டு வைக்க வேண்டும். அப்போதுதான் அது ஜெயலலிதா
என தெரியவரும் என்று கூறினார். 

தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, காவிரி விவகாரம் குறித்து ஏதும் பேசவில்லை. அவர் இந்திய நாட்டின் பிரதமராக இருந்திருந்தால் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அறிவித்திருப்பார். ஆனால், அவர்தான் ஊர் சுற்றும் நாடோடியாக இருக்கிறாரே... அவரிடம் இருந்து உருப்படியான திட்டங்களைப் எதிர்பார்க்க முடியாது என்றார். தற்போது வழங்கப்பட்டு வரும் ஒவ்வொரு ஸ்கூட்டருக்கும் எவ்வளவு கமிஷன் வாங்கப்பட்டது என்பது விரைவிலேயே தெரிய வரும் என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.