VAT rise on petrol and diesel should be canceled immediately MDMK general secretary Vaiko said in his statement.
தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியதால், இன்று அதிகாலை முதல் பெட்ரோல் விலை ரூ.3.78, டீசல் விலை ரூ.1.76 என உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
கச்சா எண்ணெய் விலை வெளிநாடுகளின் நிலவரத்துக்கு தகுந்தாற்போல் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள், அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை அறிவிக்காமல், ஏற்றி வருகின்றன.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 2008 ஜூலை மாதம் 147 டாலர் என்ற அளவில் இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.73. 2014ம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றபோது, பன்னாட்டுச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 112 டாலர் என இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை 70 சதவீதம் குறைந்துள்ளது.

மத்திய அரசு தொடர்ந்து கலால் வரியை உயர்த்தியதால், பெட்ரோல் - டீசல் விலையும் அதிகரித்து வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை 55 டாலர் என்ற மதிப்பில் உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலையோடு ஒப்பிடுபோது, தற்போதைய பெட்ரோல் - டீசல் விலை ஒன்றரை மடங்கு குறைய வேண்டும்.
இந்நிலையில், தமிழக அரசு பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாகவு, டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை 21.43ல் இருந்து, 25 சதவீதமாக்கவும் உயர்த்தியுள்ளது.

இதனால் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து மக்கள் மீது பெரும் சுமை ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையால், மற்ற பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை உள்ளது. இதையொட்டி ஏழை, எளிய பாமர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
