பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து தீபா பேரவையினர் இன்று நடத்திய ஒப்பாரி போராட்டம் கலகலப்பாக முடிந்தது.  பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சென்னை, திருவொற்றியூரில் தீபா பேரவையினர் மாட்டு வண்டி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாட்டு வண்டியில், இருந்த சிலிண்டருக்கு மாலை போடப்பட்டிருந்தது. இந்த ஒப்பாரி போராட்டத்துக்கு பாபு தலைமை தாங்கினார். 

மாட்டு வண்டியில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரைப் பார்த்து ஒப்பாரி வைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்களிடம் அவர் கட்டளையிட்டார். ஆனால், உடன் வந்த பெண்கள் உட்பட அனைவரும் ஒப்பாரி வைக்காமல் சிரித்தபடியே சென்றனர். அது மட்டுமல்லாமல், மாட்டு வண்டியில் அமர்ந்து கொண்டு, பெட்ரோல் - டீசல் விலையேற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து பாபு கோஷங்களை எழுப்பினார். 

கயிற்றையும், சிலிண்டரையும் பிடித்துக் கொண்டே அவர் ஓட்டிக் கொண்டே கோஷங்கள் எழுப்பினார். ஆனால் உடன் வந்த ஒருவர் கூட கோஷம் எழுப்பவில்லை. உடன் வந்த அனைவரும் கொடியை மட்டும் பிடித்துக் கொண்டு அமைதியாக சென்றனர். 

பெட்ரோல் - டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்தபோதெல்லாம் போராட்டம் நடத்தாமல், தற்போது விலை இறங்கி வரும்போது போராட்டம் நடத்தி காமெடி செய்கிறார்களே என்றும், விலை உயர்வுக்கு அறிக்கை மட்டும் விட்டுவிட்டு மவுனியாக இருந்த பெரிய அரசியல் கட்சியினர் மத்தியில் தீபா பேரவை ஒப்பாரி போராட்டம் நடத்துகிறார்களே என்று பொதுமக்கள் கமெண்ட் அடித்தனர். மொத்தத்தில் வரவேற்புக்கு பதில் இந்த ஒப்பாரி போராட்டம் கலகலப்பில் முடிந்தது என்னவோ உண்மை.