petrol and diesel prices hike Reduce tax and reduce the price

தருமபுரி

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரியைக் குறைத்து விலையைக் குறைக்க வேண்டும் என்று பாமகவின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கேட்டுக் கொண்டுள்ளார்.

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசினார். 

அதில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மக்களை, காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

இதில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் காவல்துறையினர் எவ்வித மரபுகளையும் கடைப்பிடிக்கவில்லை. 

காவிரி விவகாரத்தில், மத்திய அரசு, தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் முழு அதிகாரமுள்ள ஆணையமாக அமைய வேண்டும். வரும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் கூட, இந்தியாவில் விலை குறையவில்லை. இவற்றின் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரியைக் குறைத்து, விலையைக் குறைக்க வேண்டும்.

10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில்,மாணவ, மாணவியர் 94.5 சதவிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் அதிகம். இது வரவேற்கத்தக்கது. அதேபோல, தேர்ச்சி விகிதத்தை குறைவாக பெற்றுள்ள மாவட்டங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும். 

எரிவாயுக் குழாய் பதிப்பு, உயர்மின் கோபுர வழித்தடம் அமைப்பு ஆகிய திட்டங்களுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது. மாற்று வழியில் இத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி அணையில் மதகுகளை சீர்செய்து, மீண்டும் 52 அடி தண்ணீர் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, எண்ணேகொல்புதூரிலிருந்து தும்பலஅள்ளி மற்றும் படேதலாவ் கால்வாய்த் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். 

தருமபுரியில் ஒளவையார் பெயரில் புதிய பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.