கடந்த ஆண்டில் மட்டும் செஸ் வரி மூலம் மத்திய அரசு ரூ.28 லட்சம் கோடி வருவாயை ஈட்டியிருக்கிறது. ஆகையால்தான் செஸ் வரியை ரத்து செய்யக் கேட்கிறோம்.
பாஜக அரசின் இந்தி மொழிக் கொள்கையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் அதை சமாளிப்பதற்காக பிரதமர் மோடி பாவ்லா செய்து வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கே.பாலகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாட்டில் மொழியைப் பயன்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்த பார்க்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுமே தேசிய மொழிதான். அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது இருக்கிறது என்று பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு கூறியுள்ளார். ஆனால் நடைமுறையில் நிகழ்வது வேறாக உள்ளது. சில நாட்களுக்குமுன்பு தமிழகத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவை அனுப்பியிருக்கிறார்கள். இந்தி மொழியை அதிகாரப்பூர்வமாக, அலுவல் மொழியாக எந்தளவுக்கு பயன்படுத்துகின்றனர் என ஆய்வு செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் இருப்பதாக சொல்லும் மோடி, அனைத்து மொழிகளையும் தேசிய மொழியாக அங்கீகரித்து ஆட்சி மொழியாக அறிவிக்கத் தயாரா என்று அறிவிக்க வேண்டும். இந்தியைப் போன்று மற்ற மொழிகளையும், தமிழ் மொழியையும் வளர்க்க ஏன் அலுவல் மொழிக் குழுவை அமைக்கவில்லை? இதை மோடி தெளிவுபடுத்த வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், அவர்களுடைய இந்தி மொழிக் கொள்கையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் சமாளிப்பதற்காக பிரதமர் மோடி பாவ்லா செய்து வருகிறார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தால் மக்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இதைச் சமாளிப்பதற்காக அவசரம் அவசரமாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதன்படி பெட்ரோல், டீசலில் கலால் வரி ரூ. 8 குறைத்திருப்பதாக அறிவிப்பு செய்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா பொருட்களின் விலை குறைந்த போதெல்லாம் ஓராண்டில் மட்டும் சமையல் காஸ் சிலிண்டர் ரூ.350 உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? கலால் வரியில் மத்திய அரசுக்கும் பங்கு போகிறது. மாநில அரசுக்கும் பங்கு போகிறது. ஆனால், செஸ் வரி என்பது முழுக்க முழுக்க மத்திய அரசுக்கு மட்டுமே செல்கிறது. மத்திய அரசுக்கு மட்டுமே வருவாயாக செல்லும் செஸ் வரியை குறைக்கவில்லை. மாநில அரசுக்கும் செல்லும் கலால் வரியை குறைத்திருக்கிறார்கள். அது ஏன்?

கடந்த ஆண்டில் மட்டும் செஸ் வரி மூலம் மத்திய அரசு ரூ.28 லட்சம் கோடி வருவாயை ஈட்டியிருக்கிறது. ஆகையால்தான் செஸ் வரியை ரத்து செய்யக் கேட்கிறோம். செஸ் வரியைக் குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாகக் குறைந்து விடும். எனவே, பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் செஸ் வரியைத் திரும்பப் பெற வேண்டும்.” என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
