மனுதர்மத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழகத்தினர் திரளாக பங்கேற்க வேண்டுமென கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

காலம் காலமாக பெண்களை இழிவு செய்யும் மனு தர்மம் என்னும் சனாதன நூலினை தடைசெய்ய வலியுறுத்தி நாளை சனிக்கிழமை 24-10-2020 பிற்பகல் 3 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக  தமிழ் நாடெங்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது வரவேற்கத்தக்க பாராட்டத்தக்க நடவடிக்கையே, மனு நீதி ஒரு குலத்துக்குகொரு நீதி என்பதை தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. 

ஏன் பலமுறை நமது இயக்கத்தின் சார்பில் அது எரிக்கவும் பட்டுள்ளது 17-10-1927 அன்று காட்பாடியில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மாநாட்டில் எம்.சி ராஜா எரித்தார்,   4-12-1927 அன்று குடியாத்தத்தில் நடைபெற்ற வடாற்காடு மாவட்ட சுயமரியாதை மாநாட்டில்  எரிக்கப்பட்டது, 1927 டிசம்பர் 25ல் மகாராஷ்டிர மாநிலம்  மகத் நகரில் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம சாஸ்திரம் எரியூட்டப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் 1922 ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மனு தர்மத்தையும், ராமாயணத்தையும் எரிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் முழங்கினார். எனவே மனுதர்ம எதிர்ப்பு என்பது நமது இயக்கத்தின் தொடர் நடவடிக்கையாகவே இருந்துவந்திருக்கிறது.

மனுதர்மம் கூறுவது என்ன.?

மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரப் முக்கியமாக வேண்டி அவர்களை புணருகிறார்கள் என மனு அத்தியாயம் 9 ஸ்லோகம் 14 தெரிவிக்கிறது.  மாதர்கள் கற்பு நிலை இன்மையும், நிலையா மனமும், நண்பின்மையும் இயற்கையாக உடையவராதலால் கணவனால் காக்கப்பட்டு இருப்பினும்  அவர்களை விரோதி கிறார்கள் என மனு அத்தியாயம் 9 ஸ்லோகம் 15 கூறுகிறது.

 

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை, இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் என மனு அத்தியாயம் 9 ஸ்லோகம் 17 கூறுகிறது. இப்போதைக்கு இவை போதும் என்று கருதுகிறோம்.

மனித உரிமை, பெண்ணுரிமை, சமத்துவ உரிமை விரும்பும் ஒரு நாகரீக சமுதாயத்தில் மனுதர்ம சாஸ்திரம் என்ற நூல் அனுமதிக்க படலாமா.? எனவே நாளை விடுதலை சிறுத்தைகள் மனுதர்மத்தை தடை செய்யக்கோரி நடத்தியிருக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் வரவேற்கிறது. கழகத் தோழர்களும், குறிப்பாகப் பெண்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வெற்றியாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் அதில் கூறப்பட்டுள்ளது.