கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வற்கு முந்தையநாள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள், பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் என ஆயிரக்கணக்கான நபர்களை போலீசார் காவலில் வைத்தனர்.

மேலும், தொலைத்தொடர்பு இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியதும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. தற்போது அங்கு லேண்ட் லைன் இணைப்புகள் முற்றிலும் செயல்பட தொடங்கி விட்டது. மேலும் அமைதி நிலவ தொடங்கியதால் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கையை காஷ்மீர் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் மாநாட்டு கட்சியின் தலைவர்களும், முன்னாள் முதல்வர்களும், அப்பாவும் மகனுமான பரூக் அப்துல்லா மற்றும் ஓமர் அப்துல்லாவை சந்தித்து பேச அவர்களது கட்சியின் பிரதிநிதிகளுக்கு காஷ்மீர் அரசு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

இது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் மதன் மான்டோ கூறுகையில்,  அரசு அனுமதி அளித்ததையடுத்து பருக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லாவை சந்தித்து பேசுவற்காக, மாகாண தலைவர் தேவேந்திர சிங் ராணா தலைமையில் 15 பேர் கொண்ட பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை ஜம்முவிலிருந்து கிளம்பி செல்கின்றனர் என தெரிவித்தார்.


 
பருக் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் ஓமர் அப்துல்லா அதற்கு அருகில் உள்ள ஹிரி நிவாஸில் காவில் வைக்கபட்டுள்ளார். காவலில் உள்ள ஓமர் அப்துல்லாவை அவரது சகோதரி இரண்டு முறை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.