திருக்கோயில்கள் நிதியிலிருந்து மீன் மார்க்கெட் கட்ட அனுமதி.. வெடித்த சர்ச்சை.. வெகுண்டெழுந்த ஹெச்.ராஜா.!
“கோவில் நிதியை மீன் மார்கெட் கட்ட பயன்படுத்துவது சட்டவிரோதம் மற்றும் கோவில்களை முடக்கும் செயல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என்று ஹெச். ராஜா பதிவிட்டுள்ளார்.
தமிழக இந்து திருக்கோயில்களின் நிதியிலிருந்து மீன் சந்தைக் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை குயப்பேட்டையில் உள்ள கந்தசாமி மற்றும் ஆதி மொட்டையம்மன் கோயில்கள் அருகே பழைய மீன் சந்தை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய மீன் சந்தைக்கான கட்டிடம் கட்டப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தக் கட்டிடங்களைக் கட்டும் பணிகளுக்கு ரூ. 1.55 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மீன் சந்தையைக் கட்டுவதற்கு தேவையான நிதியை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் மற்றும் வைகுண்ட பெருமாள் கோயில் போன்ற திருக்கோயில்களிலிருந்து கடனாகப் பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு இந்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளார்.
இந்த விவரங்கள் அனைத்தும் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனையடுத்து பாஜகவினர் தமிழக அரசின் இந்த முடிவை விமர்சனம் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோவில் நிதியை மீன் மார்கெட் கட்ட பயன்படுத்துவது சட்டவிரோதம் மற்றும் கோவில்களை முடக்கும் செயல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என்று ஹெச். ராஜா பதிவிட்டுள்ளார். இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை செயல்பாடுகளை பாஜகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருக்கோயில்களின் நிதியிலிருந்து மீன் சந்தை கட்டும் அரசின் முடிவு சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.