சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க கூடாது என்கிற முடிவில் ஓபிஎஸ் – இபிஎஸ் உறுதியாக இருப்பதாகவும் அதற்கு ஏற்ப திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு பிப்வரி மாதம் சிறைக்கு சென்ற சசிகலா வரும் ஜனவரி 27ந் தேதி விடுதலையாக உள்ளார். சிறைக்கு செல்வதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசை அமைத்துக் கொடுத்ததுடன் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக தினகரனையும் நியமித்திருந்தார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் என்கிற பதவியுடன் தான் அவர் சிறைக்கும் சென்று இருந்தார். ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் எடப்பாடி பழனிசாமி சசிகலாவிற்கு எதிர்முகாம் சென்றார். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார்.

ஆனால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் சசிகலா நீடித்து வருகிறார். இதனால் தான் தினகரன் ஆரம்பித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சசிகலாவுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அதிமுகவை கைப்பற்றுவது தான் சசிகலாவின் முதல் திட்டம் என்கிறார்கள். அதற்கு ஏற்ப தற்போது முதலே அவர் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள். என்ன தான் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போன்றோர் தற்போது எடப்பாடி பழனிசாமி பின்னால் அணி வகுத்தாலும் தேர்தல் நேரத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தனக்கு சாதகமாகிக் கொள்ள சசிகலா திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

அதிலும் தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் தேர்தலுக்கு பிறகு கண்டிப்பாக கைப்பற்ற முடியும் என்று சசிகலா நம்புகிறார். அதற்கு இந்த தேர்தலில் அதிமுக தோற்க வேண்டும் என்பதும் சசிகலாவிற்கு தெரிந்துள்ளது. அதிமுக தோற்கும் பட்சத்தில் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் ஆகியோர் பலவீனமாகிவிடுவார்கள். இதனை பயன்படுத்தி மீண்டும் அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு வந்துவிடலாம்எ ன்று சசிகலா கணக்கு போடுகிறார். அதிமுகவில் தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி முதல் சாதாரண கிளைச்செயலாளர் வரை சசிகலாவிற்கு அவர்களின் ஜாதகமே தெரியும்.

இதனால் அதிமுக தங்கள் கைகளை விட்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தற்போதே பிடியை இறுக்க எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளனர். அதனால் தான் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்னர் அவசரஅவசரமாக பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டியுள்ளனர். மேலும் பொதுக்குழுவில் வைத்து சசிகலா மட்டும் அல்லாமல் மேலும் பலரை அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்க உள்ளனர். அதிலும் ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்கிற காரணத்தை கூறி சசிகலாவை கட்சியில் இருந்து விரட்ட இருவரும் தீர்மானித்துள்ளார்கள்.

கடந்த ஞாயிறன்று இரவு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்தே முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேசியுள்ளனர். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவருமே ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார்கள். இதனை அடுத்தே செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கான தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய கையோடு புதிய நிர்வாகிகள் நியமனமும் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள்.

தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வேறு சிலரிடம் ஒப்படைக்க முடிவாகியுள்ளதாக தெரிகிறது. இதே போல் தேர்தல் நேரத்தில் உட்கட்சி பிரச்சனைகளை சரி செய்ய தனியாக குழு அமைக்கவும் அந்த குழு மூலம் தற்போதுள்ள பிரச்சனைகளை பேசித் தீர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து சசிகலா நிரந்தரமாக நீக்கப்படும் பட்சத்தில் அவரது சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.