பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.. இந்நிலையில், கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் பெரியாரின் பிறந்தநாள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதில் பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார்!  பெரியார் புகழ் ஓங்குக!’ என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள வைக்கம் பகுதியில் தந்தை பெரியார்  சாதிய கொடுமைகளை எதிர்த்து போராடி வெற்றி பெற்றது அம்மாநில மக்களிடையே இன்றும் பெருமையாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அரசியல் பிரச்னைகளுக்கு பெரியாரை அவ்வப்போது உதாரணம் கூறுவது குறிப்பிடத்தக்கது.