பெரியார் எதிர்ப்பு என்கிற கொள்கையை வைத்து பாஜக தமிழகத்தில் அரசியல் செய்து வரும் சூழலில் பெரியாருக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசிய பேச்சுகள் விவகாரமாகியுள்ளதாக சொல்கிறார்கள்.

பெரியார் எதிர்ப்பு என்கிற கொள்கையை வைத்து பாஜக தமிழகத்தில் அரசியல் செய்து வரும் சூழலில் பெரியாருக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசிய பேச்சுகள் விவகாரமாகியுள்ளதாக சொல்கிறார்கள்.

பாஜகவில் அனைவரும் அறிந்த நபராக இருக்கும் ஹெச்.ராஜா முதல் சமூக வலைதளங்களில் அந்த கட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கல்யாணராமனாக இருக்குட்டும் அனைவரும் ஒரே குரலில் பெரியார் எதிர்ப்பு என்பதில் உறுதியாக உள்ளனர். பாஜகவின் அடிப்படை நாதமே, இந்து மத நம்பிக்கைகள், கோவில்கள் தான். ஆனால் பெரியார் இந்த இரண்டுக்கும் எதிராக இருந்தார். எனவே பெரியார் எதிர்ப்பு என்பதன் மூலமாகத்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பெரியார் எதிர்ப்பு முழக்கங்களை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசுவது, செருப்பு மாலை அணிவிப்பது என ஒரு தரப்பினர் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோவையில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசப்பட்ட விவகாரத்தில்பாஜக அனுதாபி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். அந்த இளைஞர் தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதோடு மட்டும் அல்லாமல் கோவில்களுக்கு எதிரே உள்ள பெரியார் சிலைகளை அகற்றுவதற்கான இயக்கத்தையும் பாஜகவினர் தொடங்கியுள்ளனர். இப்படி பெரியார் எதிர்ப்பு அரசியலை மையமாக வைத்து பாஜக இயங்கி வரும் நிலையில், பெரியார் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதி அவரை யாரும் கொச்சைப்படுத்தக்கூடாது என்று பாஜக மாநில தலைவர் முருகன் கூறினார். இது எதிர்கட்சியினருக்கு ஆச்சரியத்தை கொடுத்த நிலையில் பாஜகவினருக்கு எரிச்சலை கொடுத்தது. இந்த நிலையில் பெரியாரின் பிறந்த நாளன்றும் சமுதாயத்திற்காக பெரியார் எண்ணற்ற தொண்டுகளை ஆற்றியுள்ளதாக கூறினார்.

பெரியார் கடவுள் மறுப்பு என்பதை தாண்டி பல்வேறு சீர்திருத்த கருத்துகளை கூறிய மதிப்புமிக்க தலைவர் என்றும் முருகன் தெரிவித்தார். இது பாஜகவினரை கொந்தளிக்கச் செய்தது. இதனை அடுத்து எல்.முருகன் திராவிட அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக பேசுவதாக டெல்லிபாஜக தலைமைக்கு புகார்கள் பறந்துள்ளன. புகார்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே முருகனை அவசரமாக டெல்லி வருமாறு நட்டா அழைத்ததாக சொல்கிறார்கள். அங்கு சென்றவிடம் இதைப்பற்றி நட்டா கேட்ட போது, தான் பெரியாருக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை என்றும் அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி அவரை கொச்சைப்படுத்தக்கூடாது என்று மட்டுமே கூறியதாக விளக்கம்அளித்ததாக சொல்கிறார்கள். அதே போன்று தமிழக அரசியல் சூழல், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளரை மையமாக வைத்து எழுந்துள்ள பிரச்சனை, அதிமுகவில் தற்போது யார் கை ஓங்கியுள்ளது என்பது பற்றியும் நட்டா விசாரித்ததாக சொல்கிறார்கள்.