சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு,  தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை என  திமுக எம்.பி.கனிமொழி ஆவேசமாக கூறியுள்ளார்.

கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. திராவிட கழக தலைமையால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை அருகே பல்வேறு விதமான போராட்டங்களும் பல்வேறு விதமான பெரியாரின் சிந்தனை நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், பெரியாரின் சிலையின் மீது மர்ம ஆசாமிகள் காவி சாயத்தை ஊற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுபற்றி தகவல் அறிந்த தி.க. மற்றும் திமுகவினர் அங்கு குவிந்ததால் பதற்றம் உருவானது. இந்த சம்பவத்திற்கு வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு,  தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.