பெரியகுளம் 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், துணைமுதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த ஒன்றியத்தை அதிமுக கைப்பற்றும் சூால் உருவாகியுள்ளது. 

உள்ளாட்சி தேர்தலில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் தலைவர், துணைத் தலைவர்களை தேர்வு செய்ய உள்ளனர். மொத்தமுள்ள 5,090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 2,100 இடங்களிலும், அதிமுக 1,781 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல மற்ற கட்சிகளும் பல இடங்களில் வென்றுள்ளன. அதேநேரத்தில் சுயேட்சைகளும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை பிடிப்பதில் இவர்களே முக்கிய பங்கு வகிப்பவர்களாக இருக்கிறார்கள். இதையடுத்து சுயேட்சை கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. சுயேட்சை கவுன்சிலர்களை கடத்துவதற்கும் பல இடங்களில் முயற்சி நடந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களும் பல இடங்களில் கடத்தப்பட்டுள்ளனர். மேலும், கவுன்சிலர்கள் பலர் அணி மாறவும் இப்போதே தயாராகி வந்தனர். 

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்தில் 16 கவுன்சிலர்கள் கொண்ட இந்த ஒன்றியத்தில், அதிமுக 6 இடங்களிலும், திமுக 8 இடங்களிலும், தேமுதிக, அமமுக தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. துணை முதல்வரின் சொந்த தொகுதி என்பதால் எப்படியாவது பெரியகுளம் ஒன்றியத்தை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இருந்து வந்தனர். 

இந்நிலையில், ஜெயமங்கலம் 8-வது வார்டில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். தற்போது செல்வம் அதிமுகவில் இணைந்ததால் திமுகவின் பலம் 7-ஆக குறைந்ததுடன், தேமுதிகவுடன் சேர்த்து அதிமுக கூட்டணி பலம் 8-ஆக அதிகரித்துள்ளது. இதனால் பெரியகுளம் ஒன்றியம் அதிமுக வசம் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.