முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளியான பேரறிவாளனை விடுவிப்பதில் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னை சந்திக்க வந்த இயக்குநர் பா.ரஞ்சித்திடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராகுல் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் உள்ளிட்ட 7 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டணை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்ததால் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக  தமிழக அரசு அனுப்பிய கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது அரசியல், சினிமா மற்றும் சமூகம் தொடர்பாக பேசியதாக ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில தெரிவித்துள்ளார்.

அப்போது தனது தந்தை ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை விடுவிப்பதில் தனக்கோ, தன்னுடைய குடும்பத்தினருக்கோ எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தார்.