சபாநாயகரால் எங்களை பதவியில் இருந்து நீக்கமுடியாது எனவும், முட்டாள்கள் சாம்ராஜ்ஜியம் நடக்கிறது எனவும் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 

நீண்ட நாள் இழுப்பறிக்கு பிறகு அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்துள்ளது. ஆனால் ஏற்கனவே ஒன்றி இருந்த டிடிவியையும் சசிகலாவையும் எடப்பாடி நீக்கியதாலேயே இந்த இணைப்பு சாத்தியமாகியுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த கையோடு புதுச்சேரிக்கு சென்று விட்டனர். அங்கு ரிசார்டில் தங்கி ஜாலியாக டூர் சுற்றி வருகின்றனர். 

மேலும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் எனவும் சபாநாயகர் முதல்வராக வந்தால் எங்களுக்கு கவலை இல்லை எனவும், வலியுறுத்தி வருகின்றனர். 

இவர்களை இப்படியே விட்டால் சரிவராது என முடிவெடுத்த முதலமைச்சர் சபாநாயகரையும் கொறடாவையும் வைத்து  சித்து வேலை காண்பிக்க ஆரம்பித்துள்ளார். 

அதாவது அரசுக்கு எதிராக செயல்பட்டதால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின் 19 பேரையும் பதவி நீக்கம் செய்யுமாறு கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளரகளை சந்தித்த பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல், சபாநாயகரால் எங்களை பதவியில் இருந்து நீக்கமுடியாது எனவும், முட்டாள்கள் சாம்ராஜ்ஜியம் நடக்கிறது எனவும் தெரிவித்தார். 

மேலும், சபாநாயகர் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றங்களில் சந்தித்து கொள்கிறோம் எனவும், ஒன்றும் தெரியாத எம்.எல்.ஏக்களுக்கு பூச்சாண்டி காட்டி எங்களை மிரட்ட பார்க்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார். 

இன்னும் 20 எம்.எல்.ஏக்களை வரவிடாமல் தடுக்கவே இவ்வாறு பேசி வருகிறார்கள் எனவும், சட்டப்பேரவையில் எதிர்த்து வாக்களித்த ஒபிஎஸ்சை ஏன் நீக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.