தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 150 இடங்களை பிடிப்போம் இரண்டு இடங்களை பிடிப்போம் என அண்ணாமலை என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான் என்றும், ஒரு போதும் அதற்கு நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும் எதிர்க் கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க திமுக அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை பாஜக முன்னெடுத்து வருகிறது. அதிமுகவை காட்டிலும் பாஜக தீவிர எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதே போல் 2016 சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறிவருகிறார்.

தமிழ்நாட்டு அரசியலில் இனி பாஜக- திமுக என்ற சூழல்தான் இருக்கும் என்றும் அண்ணாமலை பேசிவருகிறார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் தனியார் ஊடகம் எழுப்பிய கேள்விக்கு அவர் காட்டமாக பதில் அளித்துள்ளார். அதில் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக பாமக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அவர்களுக்கான மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்ற பண்பாட்டின் அடிப்படையில் ஒரு மரியாதைக்காக தான் அவர்களை சென்று பார்த்தோம், அந்த சந்திப்பின்போது எங்களுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறீர்கள், அந்த வெற்றிக்கான ஆதரவை அப்படியே உங்களுக்கு தருகிறோம் என அண்ணாமலை கூறினார் என்றார்.

தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலைகள் இனி பாஜக- திமுகவை சுற்றியே இருக்கும் என அண்ணாமலை கூறியிருக்கிறாரே என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஜெயக்குமார், எந்தக் கட்சியாக இருந்தாலும் தங்கள் கட்சியை வளர்த்து நாட்டை பிடிக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து கட்சியினருக்கும் உள்ளது. அந்த அடிப்படையில்தான் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் 200 இடங்களை பிடிப்போம் என அந்தந்த காட்சிகள் கருத்து சொல்கின்றன. ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நடைமுறையில் அதற்கு சாத்தியம் இல்லை, வாய்ப்பு இல்லை, தமிழ்நாட்டில் காங்கிரஸ் பாஜக என தேசிய கட்சிகளை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.
