வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவிற்கு தப்பி செல்ல இலங்கை அதிபர் குடும்பம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிகரித்துள்ள உணவு பொருட்களின் விலை

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். இரவு தூங்க செல்லும் போது ஒரு விலையும், விடிந்ததும் மற்றொரு விலையும் உள்ளது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. ஒரு கப் டீ யின் விலை 100 ருபாயை கடந்துள்ளது. அரிசி ஒரு கிலோவின் விலை 500 ரூபாயை தொட்டுள்ளது. முட்டை 38 ரூபாய்க்கும், கேஸ் சிலண்டர் விலை 5000 ரூபாயாவும் விற்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. எரிவாயு பற்றாக்குறை காரணமாக 13 மணி நேர மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு சந்தித்துள்ள மிகப்பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடி என கூறப்படுகிறது. 

13 மணி நேர மின் வெட்டு

டீசல் பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில் செயல்பாடு முடங்கியுள்ளது, எரிபொருளை சேமிக்கும் வகையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. டீசல் இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய பணம் இல்லாத காரணத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தொடர் மின்வெட்டு காரணமாக அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் வகையில் தெரு விளக்குகளை எரிய வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற மோசமான நிலை நீடிப்பதால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கவலை அடைந்துள்ளனர்.

இலங்கை அதிபர் தப்பி செல்ல திட்டம்?

இந்தநிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே மற்றும் ராஜபக்‌ஷே குடும்பத்திற்கு எதிராக இலங்கை மக்கள் போராடி வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலமையை சரி செய்ய நீண்ட நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் இலங்கையை விட்டு தங்களது நட்பு நாடான சீனாவிற்கு தப்பி செல்ல இலங்கை அதிபர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்து போதும் இந்த தகவலை இலங்கை அதிபர் வட்டாரம் மறுத்துள்ளனர். பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அதிபர் எடுத்துள்ளதாகவும், விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளனர்.