கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல், தமிழக அரசியலில் ஊழல் பெருகிவிட்டது என கருத்து தெரிவித்தார். இதற்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஜெயகுமார், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கமல் மீது வழக்கு தொடருவதாகவும், அவர் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களுக்கு கணக்கு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினர். இந்த பனிப்போர் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் கமல், தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு கருத்தை வெளியிட்டார். அதில் தனது ரசிகர்களும், பொதுமக்களும் ஆளுங்கட்சியினர், அமைச்சர் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, புகார்களை அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்து கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் ‘‘ஊழலே இல்லை நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல?. ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுதாசில வேணாம். கிழிச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அத செய்யுங்க’. என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், புகார்கள் குறித்து அனுப்ப வேண்டிய துறை சார்ந்த அமைச்சர்கள் முகவரி: http://www.tn.gov.in/ministerslist என இணையதள முகவரியையும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, அமைச்சர்கள் முதல், வார்டு கவுன்சிலர்கள் வரை தற்போது பதவியில் இருக்கும் பிரதிநிதி, இருந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் செய்த ஊழல்கள் பற்றி பொதுமக்கள் ஆதாரத்துடன் தகவல்களை சேகரிக்க தொடங்கிவிட்டனர். இதனால், ஆளுங்கட்சியினர் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர்.

குறிப்பாக கவுன்சிலர்கள் சார்பில் சாலை அமைப்பது, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடந்த மக்கள் பணி, அதற்கான செலவுகள் உள்பட அனைத்து தகவல்களையும் திரட்டி வருகின்றனர்.

ஏற்கனவே பல அணிகளாக உள்ள அதிமுகவினர், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயங்கி வருகின்றனர். இந்த நேரத்தில், அரசியல் பிரதிநிதிகளை பற்றிய புகார்களை அனுப்பினால், அவர்களுக்கு சீட் கிடைக்குமா, மக்களின் கேள்விகளுக்கு எதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அச்சத்தில் உள்ளனர்.