அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஒரு சில இடங்களில் மிகமிக கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு இடைவெளிவிட்டு மிதமான மழையும் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அண்ணா பல்கலை,  மண்டபம் (ராமநாதபுரம்) தலா 3 சென்டிமீட்டர் மழையும், சென்னை நுங்கம்பாக்கம், எண்ணூர் (திருவள்ளூர்) மயிலாடுதுறை (நாகப்பட்டினம்) ஆலந்தூர் (சென்னை விமான நிலையம்) தலா 2 சென்டி மீட்டர் மழையும், வலங்கைமான் (பெரம்பலூர்) திருச்செந்தூர் தல 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.