1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உட்பட ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் 9-10-2020 பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய  கனமழையும், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர். திருச்சிராப்பள்ளி. திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9-ஆம் தேதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக்கூடும், அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்சையும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்ஸையும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் 10-10-2020 காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும். இதன் காரணமாக அக்டோபர் 9 முதல் 11 வரை மத்திய வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அக்டோபர் 10,11 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு வடக்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திரா, ஒரிசா, கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 12ம் தேதி மத்திய மேற்கு மற்றும் வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதியில், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் அப்பகுதியில் இருந்து இன்று இரவுக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.