காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 2-1-2021 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். 

3-1-2021 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 4-1-2021 தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.5-1-2021 தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்,  குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக பாபநாசம், (திருநெல்வேலி) 9 சென்டிமீட்டர் மறையும், அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 8 சென்டி மீட்டர் மழையும், சமயபுரம் (திருச்சிராப்பள்ளி) மணிமுத்தாறு (திருநெல்வேலி) மண்டபம் (ராமநாதபுரம்) தலா 7 சென்டிமீட்டர் மழையும், குன்னூர் (நீலகிரி) குடவாசல் (திருவாரூர்) நத்தம் தானியங்கி மழைமானி (ராமநாதபுரம்) கொடுமுடி (ஈரோடு) ராமேஸ்வரம் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.