people enemies of the Stalin - OPS

ஜெயலலிதாவின் ஆட்சி தொடரக்கூடாது என நினைப்பவர்கள் மக்களின் விரோதிகள் என்றும், எதிர்கட்சிகள் இணைந்து ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த நினைப்பதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

மறைந்த எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அரசு சார்பில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதற்கு என்ன உரிமை உள்ளது என்றார்.

மாநில சுயாட்சி குறித்து இத்தனை ஆண்டுகள் பேசாமல், ஸ்டாலின் தற்போது பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர் கூறினார்.

திமுக ஆட்சியின்போது முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதாவின் ஆட்சி தொடரக் கூடாது என நினைப்பவர்கள் மக்களின் விரோதிகள் என்றும், எதிர்கட்சிகள் இணைந்து ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த நினைப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.