நிவர் புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளிக்கையில்;- புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் வாயிலாக வரும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். 

புயல் கரையை கடக்கும்போது மக்கள் வாகனங்களில் செல்லக்கூடாது. புயல் குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்; அமைதியாக இருக்க வேண்டும். அனைத்து நிவாரண முகாம்களிலும் மக்களுக்கு தடையின்றி உணவு தரப்படுகிறது. நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

மேலும், புயல், மழையையொட்டி தமிழகத்தின் 36 மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 6 படைகள் விரைந்துள்ளது.நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால் தாழ்வான இடங்களில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.