அதிமுகவில் சசிகலாவுக்கும் ஓபிஎஸ்க்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தற்போது விஸ்வருபம் எடுத்துள்ளது. ஜெயலலிதா ஜெயலலிதா மறைவையடுத்து, ஓபிஎஸ் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
வர்தா புயல், கிருஷ்ணா நதிநீர், ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சனைகளில் ஓபிஎஸ்ன் நடவடிக்கைகள் சிறப்பாக இருத்தால் அவரை கட்டுப்படுத்த சசிகலா குடும்பத்தினர், முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத்தலைவராக சசிகலா தேர்வு பெற்றார்.ஓபிஎஸ்ம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் அவர் பதவி ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில்,ஓபிஎஸ் துக்கிய போர்க்கொடி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை சசிகலா தரப்பினர் பெற்றுக் கொண்டதாகவும், தற்போது முதலமைச்சர் பதவியை விட்டுத் தர முடியாது என்றும் தெரிவித்துள்ள ஓபிஎஸ், சட்டப் பேரவையில் தன்னுடைய பலத்தை நிரூபிப்பேன் என்றும் சவால் விட்டுள்ளார்.
இந்நிலையில்தான் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் தனித்தனியாக சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர். இதனையடுத்து சசிகலா தரப்பினர் எம்எல்ஏக்களை சென்னையில் உள்ள தனியார் சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளனர் என்றும், அவர்களை கட்டாயமாக கடத்தி வைத்துள்ளனர் என்றும் தகவல் வெளியானது
இதைத் தொடர்ந்து எங்கள் ஊர் எம்எல்ஏ வை காணவில்லை பல தொகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனை காணவில்லை' என,அத்தொகுதி மக்கள் ஆரணி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆரணி தொகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சிலர் சேவூர் ராமச்சந்திரனின் அலுவலகத்திற்கு மனு கொடுக்கச் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், ஆரணி டவுன் காவல் நிலையத்திற்கு சென்று, 'அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை காணவில்லை; அவரை கண்டுபிடித்து தர வேண்டும்' என, புகார் அளித்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று திருப்பரங்குன்றம் தொகுதியைச் சேர்ந்த சிலர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் போசை கடந்த 10 நாட்களாக அலுவலகம் வரவில்லை என்றும் அதனால் அவரை கண்டுபிடித்துதரச் சொல்லி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் என்பவர் காவல் துறையிடம் அளித்த புகாரில், குன்னம் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. தமிழகத்தில், சட்டசபை உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக, செய்திகள் வருவதை பார்த்த போது, எங்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
ஒருவேளை, எங்கள் தொகுதி உறுப்பினரையும், சமூக விரோதிகள் கடத்தியிருப்பரோ என்ற சந்தேகம் எழுகிறது என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வமும் கடந்த சில நாட்களான காணவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
