நம் நாட்டில் கொரோனா பரவலுக்கு மக்களே காரணம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

மக்கள் முறையாக சட்டத்தை பின்பற்றவில்லை, ஊரடங்கு தளர்வு அளித்தவுடன் பல இடங்களில் ஒரு மைல் தூரத்திற்கு மக்கள் முண்டியடித்துக் கொண்டு நின்று மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். அரசு கோரிக்கை விடுத்த பின்னரும் சமூக இடைவெளியின்றி விநாயகர் சதுர்த்தி அன்று ஊர்வலம் செல்வதுமாக உள்ளனர். மேலும் விநாயகர் சதுர்த்திக்கு பொருட்களை வாங்குவதற்காக பல இடங்களில்  கூட்டம் கூட்டமாகமக்கள் அலை மோதினர்.

வெளியே வராமல் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி அறிவுறுத்திய பின்னரும், அதை யாரும் மதிக்கவில்லை. அனைவரும் வெளியே கடைக்கு சென்று கும்பல் கும்பலாக கலந்து பொருட்களை வாங்கிக் கொண்டாடினார்கள். இதனால் நோய் தொற்று அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆயிரக்கணக்கில் செலவு செய்துவருகிறது. ஆனால் வரியே கட்டாமல் பலர் அரசு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு சமூக வலைதளத்தில் பலர் எதிர் கருத்து பதிவு செய்து வருகின்றனர். 

அதே நேரத்தில் பிற மாநிலங்களுக்கு சென்று வருவதற்கு இனி பாஸ் தேவையில்லை என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது, அதாவது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ஆம் தேதி பிறப்பித்த நாடு தழுவிய முழு ஊரடங்கு மே- 31ம் தேதி மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதன்பின் படிப்படியாக மத்திய மாநில அரசுகள், தளர்வுகள் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை போடக்கூடாது என அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை( ஆகஸ்டு-23) அன்று முதல் புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும் பிற மாநிலங்களிலிருந்து உள்ளே வருவதற்கு மினி இ-பஸ் தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.