நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் உரையாற்றும்போது, விவசாயிகள் 60 வயது கடந்த நிலையில், ஒரு மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கு புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார். இதையடுத்து இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பொதுவாக அரசு ஊழியர்களோ, கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களோ தாங்கள் ஓய்வு பெரும்போது ஒரு கணிசமான தொகையைப் பெறுகின்றனர். அரசு ஊழியர்கள் என்றால் ஓய்வூதியம் கிடைக்கும்.

ஆனால் விவசாயிகள் என்றால் அப்படி இல்லை. விவசாயம் செய்யும்போதே நிறைய நஷ்டத்தையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மேலும் அவர்களால் விவசாயம் செய்ய முடியாத வயதான காலத்தில் மிகுந்த கஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள்.

அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என  தேர்தலின் போது பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார்.

அதன்படி 60 வயது கடந்த நிலையில் விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்  என்ற திட்டத்தை  மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது

இதையொட்டி நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவசாய துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில் 
அனைத்து சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு ஒரு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார்.


.
இதன்படி 60 வயது கடந்த தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும். இது தன்னார்வ மற்றும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் ஆகும். 18-40 வயது விவசாயிகள் இதில் சேரலாம். பயனாளிகள், ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி.) ஓய்வூதிய நிதி திட்டத்தில் உறுப்பினராக சேரலாம் என அறிவித்தார்.