ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி 2014-ம் ஆண்டு, 13½ கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா வழங்கினார்.

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி, குரு பூஜை விழாவின் போது தேவர் சிலைக்கு அந்த தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்து வருகிறது. விழா நிறைவு பெற்ற பின்பு, தங்க கவசம் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு மதுரையில் உள்ள ‘பேங்க் ஆப் இந்தியா’ வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.

இந்த தங்க கவசத்தை எடுக்கும் பொறுப்பாளராக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிட அறங்காவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
வருகிற 28-ந் தேதி தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை தொடங்குகிறது. இதையொட்டி தங்க கவசத்தை பெறுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு வந்தார்.

அவர் ஆவணங்களில் கையெழுத்திட்ட பின்பு வங்கி அதிகாரிகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து தங்க கவசத்தை எடுத்து அவரிடம் வழங்கினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், தேவரின் தங்க கவசத்துக்கு மாலை அணிவித்து, விழா குழுவினரிடம் ஒப்படைத்தார்.