பாஸ்போர்ட் விண்ணப்பிக்க மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட பாஸ்போர்ட்  சேவா மொபைல் செயலியை  கடந்த 2 நாட்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளனர்.

வெளிநாடு செல்பவர்களுக்கான கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட் வேண்டுவோர் அதற்காக நேரில் சென்று விண்ணப்பிக்கும் நடைமுறைதான் தற்போது  நடைமுறையில் உள்ளது.

பெரிய நகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளதால் மற்ற பகுதி மக்கள் அந்த நகரங்களுக்கு சென்று வர வேண்டிய சூழல் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் மட்டுமே பாஸ்போர்ட் பெற முடியும். அதுவும் ஆன் லைன் மூலம் விண்ணப்பித்துவிட்டு, குறிப்பிட்ட நாளில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு  சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, புதுப்பிக்க மற்றும் தொலைந்து போன பாஸ்போர்டுக்கு மாற்று பாஸ்போர்ட் பெறுவதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகம் ‘பாஸ்போர்ட் சேவா’ புதிய செயலி ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டது. பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் செலுத்துதல், நேர்முக தேதியை தேர்வு செய்வது ஆகியவற்றையும் இந்த செயலி மூலமாக எளிதாக செய்ய முடியும்.

இந்நிலையில் ‘பாஸ்போர்ட் சேவா ஆப்’  என்ற இந்த செயலி செம ஹிட் அடித்துள்ளது. கடந்த  2 நாட்களில் ‘பாஸ்போர்ட் சேவா’ செயலியை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். செயலி மெதுவாக இயங்குவதாக பலர் கம்மெண்ட் செய்திருந்தாலும், கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.